இலங்கையின் இணையவெளி சுதந்திரம் தொடர்பில் ஃப்ரீடம் ஹெளஸ் வெளியிட்டுள்ள அறிக்கை..!

உலகளாவிய ரீதியில் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதை முன்னிறுத்தி அமெரிக்காவைத் தளமாகக்கொண்டியங்கிவரும் அரச சார்பற்ற அமைப்பான ‘ஃப்ரீடம் ஹெளஸ்’ இவ்வாண்டில் சர்வதேச நாடுகளின் இணையவெளி சுதந்திரம் தொடர்பான அதன் மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அவ்வகையில், இலங்கையின் இணையவெளி சுதந்திரம் கடந்தகாலங்களுடன் ஒப்பிடுகையில் 2022 ஜுன் மாதத்தின் பின்னரான காலப்பகுதியில் ஓரளவுக்கு முன்னேற்றமடைந்திருப்பதாக தமது மதிப்பீட்டு அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

ஆனால் அதன் பின்னரும் தொடர்ந்த வலுவான கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும், பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பில் இலங்கையர்கள் இணையவெளி பரப்புரையில் ஈடுபட்டதாகத் தெரிவித்துள்ளது.

இலங்கையின் இணையவெளி சுதந்திரம் தொடர்பில் மேலும் அவ்வறிக்கையில்,

“2022 ஜுன் 1 – 2023 மே 31 வரையான காலப்பகுதியில் நாட்டின் இணையவெளி சுதந்திரம் எவ்வாறு காணப்பட்டது என முன்னெடுக்கப்பட்ட ஆய்வின் பிரகாரம், இக்காலப்பகுதியில் இலங்கை பகுதியளவில் இணையவெளி சுதந்திரத்தைக் கொண்டிருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.

அதுமாத்திரமன்றி 0 (மிகக்குறைந்தளவிலான சுதந்திரம்) – 100 (உச்சபட்ச சுதந்திரம்) வரையான புள்ளியிடலில் இலங்கைக்கு 52 புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன. இணையவெளி அணுகலில் காணப்படும் தடைகள் (மொத்தமாக 25 புள்ளிகள்), பதிவிடும் விடயதானங்களில் மட்டுப்பாடுகள் (மொத்தமாக 22 புள்ளிகள்) மற்றும் பயனாளர்களின் உரிமைகளை மீறும் வகையிலான செயற்பாடுகள் (மொத்தமாக 18 புள்ளிகள்) ஆகிய மூன்று விடயங்களை அடிப்படையாகக்கொண்டு இப்புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன.

அம்மூன்று விடயங்களில் இலங்கை முறையே 12, 22, 18 ஆகிய புள்ளிகளைப் பெற்றுள்ளது.

மேலும் இந்த ஆய்வு இடம்பெற்ற காலப்பகுதியில் இலங்கையின் இணையவெளி சுதந்திரம் ஓரளவுக்கு முன்னேற்றமடைந்திருந்ததாகவும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ‘அரகலய’ உள்ளிட்ட போராட்டங்களை முடக்கும் நோக்கில் அரசாங்கம் சமூகவலைத்தளங்களையும் ஏனைய தொடர்பாடல் மார்க்கங்களையும் முடக்கவில்லை.(ஆய்வு இடம்பெற்ற காலப்பகுதியில்)

அதேவேளை அதிபர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோரின் இராஜினாமாவை அடுத்து அதிபராக பதவியேற்ற ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம், பொய்யான தகவல்களைக் கட்டுப்படுத்துவதற்காக அவசரகால வழிகாட்டல்களை நடைமுறைப்படுத்தியதுடன் ‘அரகலய’ இயக்கத்தைப்பற்றி எழுதிய நிகழ்நிலை செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிராக அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட்டதோடு, நிகழ்நிலை கருத்து வெளிப்பாட்டை மட்டுப்படுத்தக்கூடிய சட்ட வரைபுகளை அறிமுகப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

ஆனால் இவ்வாறான தொடர் கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும், பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பில் இலங்கையர்கள் இணையவெளி பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். அதேபோன்று நிகழ்நிலை கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரத்தை மேலும் மட்டுப்படுத்தக்கூடியவகையில் அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம், ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் சட்டமூலம், நிகழ்நிலை ஊடகங்கள் உள்ளடங்கலாகப் பல்வேறு வழிமுறைகளிலும் பகிரப்படக்கூடிய பொய்யான தகவல்களைக் கட்டுப்படுத்துவதற்காக கடந்த 2022 ஜுலையில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால வழிகாட்டல்கள், இணையவெளி செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர் பயங்கரவாதத்தடைச்சட்டம், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயச்சட்டம் போன்றவற்றின் கீழ் கைது செய்யப்பட்டமை.” போன்ற விடயங்கள் தொடர்பிலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button