நாட்டை விட்டு வெளியேறிய நீதிபதி சரவணராஜா தொடர்பில் புலனாய்வு பிரிவு வெளியிட்ட தகவல்

நாட்டை விட்டு வெளியேறிய நீதிபதி சரவணராஜா தொடர்பில் புலனாய்வு பிரிவு வெளியிட்ட தகவல் | Resignation And Flight Of Sri Lanka Judge

முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் அல்லது வேறு எந்த வகையிலும் அச்சுறுத்தல் விடுக்கப்படவில்லை என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

முன்னாள் நீதிபதியின் திடீர் வெளிநாடுப் பயணமானது ஏற்கனவே திட்டமிடப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் டிஜிட்டல் தடயவியல் பிரிவு அரசாங்கத்திடம் சமர்ப்பித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 25ஆம் திகதி இந்தியா செல்வதற்காக முன்னாள் நீதிபதி விடுமுறை கோரி விண்ணப்பித்த நிலையில் அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் கடந்த 24ஆம் திகதி அவர் திடீரென வேறு நாட்டிற்குப் புறப்பட்டுச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தின் பின்னணியில் ஒழுங்கமைக்கப்பட்ட ஏதேனும் குழுக்களின் செல்வாக்கு இருக்கிறதா என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. உயிரச்சுறுத்தல் காரணமாக நீதிபதி சரவணராஜா பதவியில் இருந்து விலகியமை தொடர்பில் முழுமையான விசாரணை நடாத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

நீதிபதி சரவணராஜா தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டமை தொடர்பில் நீதித்துறை சேவைகள் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடுகள் எதையும் பதிவு செய்யவில்லை.

மேலும் செப்டெம்பர் 23 ஆம் திகதி தனது பதவி விலகல் கடிதத்தை நீதித்துறை சேவைகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைத்ததுடன் செப்பெடம்பர் 24ஆம் திகதி அவர் வெளிநாட்டிற்கு சென்றார்.

அத்துடன் குறித்த நீதிபதி பிரதிவாதியாக பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முல்லைத்தீவின் மு ன்னாள் மாவட்ட நீதிபதி சரவணராஜா 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி முல்லைத்தீவு நீதவானாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், முல்லைத்தீவு பொலிஸ் நிலையம் அவருக்குத் தேவையான சகல பாதுகாப்பையும் வழங்கியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்த நேரத்திலும் பாதுகாப்பு அல்லது உயிருக்கு ஆபத்தான பிரச்சினை எதுவும் எழுப்பப்படவில்லை. விசாரணையில், நீதிபதி செப்டம்பர் 24 ஆம் திகதி துபாய்க்கு சென்றது தெரியவந்துள்ளது.

அதற்காக குருநாகல் விற்பனைப் பிரதிநிதி ஒருவரிடமிருந்து எயார் அரேபியா விமானப் பயணச்சீட்டுகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதுடன் அது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் அமெரிக்க தொலைபேசி இலக்கத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கொடுக்கப்பட்ட தொலைபேசி எண் செயல்படவில்லை என்றால் மீண்டும் அழைக்க பயணச்சீட்டு விற்பனை முகவருக்கு கென்ய தொலைபேசி இலக்கம் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.

கல்முனைப் பகுதியில் இருந்து விமானப் பயணச்சீட்டுக்கான பணம் செலுத்தப்பட்டுள்ளது. ஷார்ஜா, நைரோபி, டெல்லி வழியாக ஒக்டோபர் 12ஆம் திகதி இலங்கை திரும்புவதற்கு பயணச்சீட்டு பெறப்பட்டது.

விமான நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட தகவலின்படி, ஷார்ஜாவை அடுத்து நைரோபிக்கு செல்ல நீதிபதி விமான பயணச்சீட்டை பயன்படுத்தவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button