தணிந்தது முறுகல் கனடாவிற்கான விசாசேவை ஆரம்பம் : பயணிகள் மகிழ்ச்சி
கனடாவுடனான முறுகல் நிலை தணிந்த நிலையில் நாளை (26) முதல் கனடாவிற்கான விசாசேவை தொடங்கப்படவுள்ளதாக இந்திய மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கனடா குடியுரிமை பெற்றிருந்த காலிஸ்தான் அமைப்பின் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் கனடாவில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.
இந்தக் கொலையுடன் இந்தியாவே தொடர்புபட்டதாக கனேடிய பிரதமர் வெளியப்படையாக குற்றம் சாட்டியிருந்தார்.
இதனையடுத்து இரண்டு நாடுகளுக்குமிடையேயான உறவில் விரிசல்கள் ஏற்பட்டிருந்தன. மாறி மாறி இரண்டு நாடுகளும் இராஜதந்திரிகளை வெளியேற்றியிருந்தன.
இந்த மோதல் காரணமாக கடந்த மாதம் 21 ஆம் திகதி முதல் கனடாவுக்கான விசா சேவையை நிறுத்தியது இந்தியா. பாதுகாப்பு காரணங்களால் விசா சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக கனடாவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்தது.
இதனால் கனடாவில் இருந்து இந்தியா வரமுடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் மீண்டும் விசா வழங்கும் சேவையை தொடங்க வேண்டும் என்று கனடா அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.
இதனை தொடர்ந்து நாளை முதல் மருத்துவ விசா, பிஸ்னஸ் விசா, என்ட்ரி விசா, கொன்பரன்ஸ் விசா ஆகிய 4 விசா சேவைகள் தொடங்கப்படவுள்ளன. இதனை கனடா தலைநகர் ஒட்டாவாவில் உள்ள இந்திய தூதரகம் இன்று அறிவித்துள்ளது.
இதன்மூலம் மருத்துவம் மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட காரணங்களுக்காக கனடாவில் இருந்து இந்தியா வர காத்திருந்த பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.