சாரதி அனுமதிப்பத்திரத்தில் மாற்றம்: இணைக்கப்படவுள்ள புதிய அம்சம்
தற்போதுள்ள குறைக்கடத்தி சில்லுகளுக்குப் (sim card) பதிலாக கியூ.ஆர் குறியீடுகளுடன் சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கு மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
கியூ.ஆர் குறியீட்டுடன் கூடிய டிஜிட்டல் மயமான சாரதி அனுமதிப்பத்திரத்தினை அறிமுகப்படுத்தும் திட்டமானது இந்த மாதம் அமைச்சரவை அனுமதியைப் பெற்றதன் பின்னர் நடைமுறைப்படுத்தப்படும் என மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்.
இந்த மாதம் 16 ஆம் திகதி சிறிலங்கா இராணுவத்திற்கான சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிட்டு ஒப்படைத்ததன் பின்னர் இந்த பணி ஆரம்பிக்கப்படும் என்றும்,
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக சாரதி அனுமதிப் பத்திரத்திலுள்ள குறைக்கடத்தி சில்லுகளை (reading unit chips) இறக்குமதி செய்வதில் சிக்கல்கள் உருவாகியுள்ளது.
எனவே தான் குறைக்கடத்தி சில்லுகளுக்குப் பதிலாக கியூ.ஆர் குறியீட்டினை மாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த கியூ.ஆர் குறியீட்டினை பயன்படுத்த செயலி ஒன்றும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது, இந்த செயலியினை மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள அலுவலகமும், காவல் துறையும் மாத்திரமே இயக்கும்.
மேலும், போக்குவரத்து குற்றங்களுக்கான குறைபாட்டு புள்ளி முறையும் இந்த சாரதி அனுமதிப்பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக வீரசிங்க தெரிவித்தார்.