சிறிய நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கு புதிய அதிகாரசபை
இலங்கையில் காணப்படும் நிதி நிறுவனங்கள் குறித்து இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தகவலொன்றினை வெளியிட்டுள்ளார்.
அவ்வகையில், இலங்கையில் சுமார் 11,000 சிறிய நிதி நிறுவனங்கள் இயங்கி வருகின்ற போதிலும் அவற்றில் வெறுமனே 5 நிறுவனங்கள் மாத்திரமே பதிவு செய்யப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
பெரும்பாலும் கிராமப்புறங்களில் குறைந்த வருமானம் பெறுபவர்களின் கொடுக்கல் வாங்கல்களில் இந்த நிறுவனங்கள் பெரும் செல்வாக்கு செலுத்தும் காரணத்தால் சுமார் 30 லட்சம் பேர் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேற்படி விடயம் குறித்து மேலும் அவர் அறியத்தருகையில்,
“இந்த நிறுவனங்களை பதிவு செய்வது கட்டாயமானது. சிறிய நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கு புதிய அதிகாரசபை ஸ்தாபிக்கப்படும்.
நம் நாட்டில் 11,000 நிறுவனங்கள் உள்ளன, ஆனால் 5 மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன.
பதிவு இல்லை என்றால் ஒழுங்குமுறை இல்லை. அவர்கள் தன்னிச்சையாக வேலை செய்கிறார்கள்.
இதனால், கிராமப்புற பெண்கள் பெரும் பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள்.
இது சர்வதேச பிரச்சினையாகிவிட்டது. எனவே, புதிய சட்டத்தை கொண்டு செயல்படுகிறோம்.
அனைத்து சிறிய நிதி நிறுவனங்களும் பதிவு செய்யப்பட வேண்டும். அவை மத்திய வங்கியின் விதிமுறைகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.
இந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் அபராதம் மற்றும் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.” என்றார்.