வெளிநாடொன்றுக்கு அனுப்பப்படவுள்ள 10000 இலங்கையர்கள்
இலங்கையை சேர்ந்தவர்களை இஸ்ரேலில் பண்ணை தொழிலாளர்களாக பணி புரிவதற்கு இஸ்ரேலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இஸ்ரேலின் உள்துறை அமைச்சர் மோஷே ஆர்பெல் மற்றும் இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார ஆகியோர் உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி 10,000 இலங்கையர்களை பண்ணை தொழிலாளர்களாக உடனடியாக வேலைக்கு அமர்த்த இஸ்ரேலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலினால் விவசாயத் துறையில் 30,000 வெளிநாட்டுத் தொழிலாளர்களில் சுமார் 8,000 வெளிநாட்டு விவசாயத் தொழிலாளர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், ஹமாஸ் தாக்குதலின் போது அதிகளவான வெளிநாட்டு தொழிலாளர்கள் கொல்லப்பட்டதுடன், ஹமாஸ் அமைப்பினரால் பலர் பலஸ்தீனத்திற்கு பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர்.
அதேவேளை, சுமார் 20,000 பலஸ்தீனிய விவசாய தொழிலாளர்களை இஸ்ரேலுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஒப்பந்தத்திற்கு அமைய முதல் இலங்கை விவசாயத் தொழிலாளர்கள் எதிர்வரும் வாரங்களில் வரவேண்டும் என இஸ்ரேலிய செய்தி நிறுவனமான குளோப்ஸ் தெரிவித்துள்ளது.
அத்தோடு, இலங்கையைச் சேர்ந்த 4,500 தொழிலாளர்கள் இஸ்ரேலில் பணிபுரிகின்றமை அவர்களில் பெரும்பாலானோர் வீட்டு பராமரிப்புத் துறையில் பணிபுரிகின்றமை குறிப்பிடத்தக்கது.