பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் குறித்து பிரதி சபாநாயகர் வெளியிட்ட அறிவிப்பு
நாடாளுமன்றத்தின் ஒழுங்கு பத்திரத்தில் உள்ளடக்கப்படாத உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை அரசமைப்புக்கு முரணானதா அல்லது முரணற்றதா என்று ஆராயும் அதிகாரம் இல்லாத காரணத்தால் சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட 10 மனுக்களின் விசாரணைகளை நிறைவுபடுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
நாடாளுமன்றம் நேற்று காலை 9.30 மணிக்கு பிரதி சபாநாயகர் தலைமையில் கூடிய நிலையில் இடம்பெற்ற சபாநாயகர் அறிவிப்பின் போதே இந்த விடயத்தை அஜித் ராஜபக்ச சபைக்கு அறிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், “வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் 2023.10.03 ஆம் திகதி நாடாளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் உள்வாங்கப்படவில்லை.
அரசமைப்பின் 121 (3) அத்தியாயத்தின் பிரகாரம் இந்தச் சட்டமூலம் உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்டது.
இவ்வாறான நிலையில் நாடாளுமன்றத்தின் ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்படாத ஒரு சட்டமூலத்தை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் அதிகாரம் இல்லை.
இதன் காரணமாக தாக்கல் செய்யப்பட்ட 10 வழக்குகளின் விசாரணைகளை நிறைவுபடுத்தத் தீர்மானித்துள்ளதாக உயர் நீதிமன்றம் நாடாளுமன்றத்துக்கு அறிவித்துள்ளது.” என்றார்.