அவுஸ்ரேலிய கப்பல் மீது தாக்குதல் நடத்திய சீனா..!
அவுஸ்திரேலிய கடற்படை வீரா்கள் மீது சீனா ஒலியலைத் தாக்குதல் நடத்தியதாக அவுஸ்திரேலிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையில், “சா்வதேசக் கடல் எல்லையில் அமைந்துள்ள ஜப்பானின் சிறப்புப் பொருளாதார மண்டலம் வழியாகச் சென்று கொண்டிருந்த HMAS டுவூம்பா கடற்படைக் கப்பலின் ‘புரொப்பல்லா்’களில் மீன்வலை சிக்கிக் கொண்டது.
அதனை நீக்குவதற்காக கடற்படை வீரா்கள் கடலுக்குள் குதித்தனா். அப்போது சீன கடற்படைக் கப்பலில் இருந்த ஒலியலைக் கருவி இயக்கப்பட்டது. இதில் அவுஸ்திரேலிய கடற்படை வீரா்கள் பலத்த காயமடைந்தனா்.
சீனாவின் இந்த நடவடிக்கை மிகவும் கவலையளிப்பதாக” குறிப்பிடப்பட்டுள்ளது.
தங்களது கடற்படை மற்றும் விமானப் படையினரைக் குறிவைத்து சீன ராணுவம் ஒலியலைத் தாக்குதல் நடத்துவதாக அமெரிக்காவும் பிற நாடுகளும் நீண்ட காலமாகவே குற்றஞ்சாட்டி வருகின்றன.
இதுபோன்ற நடவடிக்கைகளால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், இது சா்வதேச அளவிலான பதற்றத்தை ஏற்படுத்தும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரித்து வருகின்றனா்.