தேர்தல்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பு!
அரசியலமைப்பின் பிரகாரம் அதிபர் தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு காணப்படுகின்ற அடிப்படையில், அதனை முன்னெடுப்பதற்கான முன்னாயத்தப் பணிகளை முன்னெடுத்து வருகின்றோம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார்.
அத்துடன் தேர்தல் செலவீனம் தொடர்பில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவதுடன், தொடர்புடைய அரச நிறுவனங்களுடனும் சந்திப்புக்களை மேற்கொண்டுவருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
அதிபர் தேர்தலா, நாடாளுமன்றத் தேர்தலா மக்கள் கருத்துக்கணிப்பாக முதலில் இடம்பெறப்போகின்றது என்பது தொடர்பில் ஊடகமொன்று கேள்வி எழுப்பியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசியலமைப்பின் பிரகாரம், எதிர்வரும் செப்டெம்பர் 18ஆம் திகதியிலிருந்து ஒக்டோபர் 18ஆம் திகதிக்குள் அதிபர் தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு காணப்படுகின்றது.
அதனடிப்படையில், அதிபர் தேர்தலை முன்னெடுப்பதற்கான முன்னாயத்தப் பணிகளை முன்னெடுத்து வருவதுடன், வாக்காளர்களைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் அண்மைய நாட்களில் தேர்தல் பிரசார செலவீனம் சம்பந்தமாக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவதோடு, அதனுடன் தொடர்புடைய அரச நிறுவனங்களுடனும் சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்றோம்.
குறிப்பாக, முதற்தடவையாக தேர்தல் பிரசார செலவீனம் சம்பந்தமான விடயம் அடுத்து நடைபெறவுள்ள தேர்தலில் பிரயோக ரீதியாக பின்பற்றப்படவுள்ள நிலையில் அதுபற்றிய பரந்துபட்ட கலந்துரையாடல்கள் அவசியமாகின்றன.
இதேவேளை, அடுத்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் 25ஆம் திகதிக்கு முன்னதாக நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றே அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், நாடாளுமன்றத்தினை அதற்கு முன்பதாகவே கலைப்பதற்கான அதிகாரம் அதிபருக்கு காணப்படுவதோடு மக்கள் கருத்துக்கணிப்பு பற்றிய அறிவிப்பினை மேற்கொள்வதற்கும் அதிபருக்கு அதிகாரங்கள் அரசியலமைப்பின் ஊடாக வழங்கப்பட்டுள்ளன.
ஆகவே அவ்விதமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டால் அதற்கு அமைவாக தேர்தல்கள் ஆணைக்குழு செயற்படுவதற்கு தயாராகவே உள்ளது ” என தெரிவித்தார்.