ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிற்கு விதித்துள்ள தடை!
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் கோரிக்கைக்கு அமையவே, ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டதாக பிரபல கிரிக்கெட் இணையத்தளமான கிரிக் இன் போ செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த தீர்மானத்தை எடுப்பதற்காக கூடிய கூட்டத்தில் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தலைவர் ஷமி சில்வா, கலந்துகொண்டிருந்ததாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் அஹமதாபாத்தில் எதிர்வரும் நவம்பர் மாதம் 18-21ம் திகதி கூடவுள்ள சர்வதேச கிரிக்கெட் பேரவையின் கூட்டத்திலும் ஷமி சில்வா கலந்துக்கொள்ளவுள்ளதாக அந்தி செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் 2014 முதல் 2015ம் ஆண்டு வரையான காலத்திற்குள் கிரிக்கெட் இடைகால குழுவொன்று செயற்பட்டமையை, சர்வதேச கிரிக்கெட் பேரவை ஏற்றுக்கொண்டிருந்ததாக கிரிக் இன் போ செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2023ம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் அணி பெற்றுக்கொண்ட தொடர் படுதோல்வியை அடுத்து, முன்னாள் தலைவர் அர்ஜுண ரணதுங்க தலைமையில் இடைகால குழுவொன்றை நியமிக்க விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நடவடிக்கை எடுத்திருந்தார்.
எனினும், இந்த தீர்மானத்திற்கு எதிராக ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தலைவர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்ததை அடுத்து, 14 நாட்களுக்கு இடைகால குழுவை இடைநிறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இவ்வாறான பின்னணியில், ஊழலுடனான ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தலைவர் உள்ளிட்ட நிர்வாகத்தை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என ஆளும் மற்றும் எதிர்கட்சியினால் ஒன்றிணைந்து பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட பிரேரணை நேற்று முன்தினம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
இதேவேளை, ஸ்ரீலங்கா கிரிக்கெட் அதிகாரிகளை, கோப் குழு முன்னிலையில் எதிர்வரும் 14ம் திகதி முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான பின்னணியிலேயே ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை இடைகால தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.