தேர்தலின் பின் பஸில் ராஜபக்ச அமெரிக்காவுக்கு ஓடுவார்: விமல் வீரவன்ச
எங்கள் ஹெலிகொப்டர் கூட்டணியை வீழ்த்துவதற்கான வல்லமை மொட்டுக் கட்சிக்குக் கிடையாது, தேர்தல் முடிந்த கையோடு அமெரிக்காவுக்கு ஓட வேண்டிய நிலை பஸில் ராஜபக்சவுக்கு ஏற்படும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
விமல் அணியின் ‘ஹெலிகொப்டர்’ ராஜபக்சவின் அரசியல் கோட்டையில் உடைந்து விழும் என ‘மொட்டு’க் கட்சியின் பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அவரின் கருத்துக்கு ஊடகங்களிடம் பதிலடி கொடுக்கும் வகையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
எமது ஹெலிகொப்டரை வீழ்த்துவதற்கான ஏவுகணைகள் தற்போது ராஜபக்சக்களிடம் இல்லை. அவ்வாறு இருந்திருந்தாலும் அவை தற்போது புஷ்வாணங்களாகியிருக்கும்.
‘மொட்டு’க் கட்சியைப் பூஜ்ஜிய மட்டத்துக்குக் கொண்டு வந்த ஸ்தாபகர் என்ற நாமத்துடனேயே பஸில் ராஜபக்சவுக்கு அமெரிக்கா செல்ல நேரிடும் என விமல் வீரவன்ச மேலும் தெரிவித்திருந்தார்.