உலகை அச்சுறுத்தும் மற்றுமொரு வைரஸ்! விடுக்கப்பட்ட எச்சரிக்கை.
கொரோனாவை விட 100 மடங்கு ஆபத்தான பறவைக் காய்ச்சலின் ‘எச்5 என்1’ (H5N1) வைரஸ் அமெரிக்காவில் (America) கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் பரவ ஆரம்பித்தால், கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களை விட பல மடங்கானோர் உயிரிழக்க நேரிடுமென எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தி வெளியாகியுள்ளமை மக்கள் மத்தியில் பதற்றத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் உலகம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்திய கொரோனா தொற்று நோயிலிருந்து, உலகம் இன்னும் மீளவில்லை.
இந்த நிலையில், விஞ்ஞானிகள் மற்றொரு தொற்றுநோய் குறித்து எச்சரிக்கத் தொடங்கியுள்ளனர். இதன்படி, பறவைக் காய்ச்சல் தொற்று நோய்க்கான சாத்தியம் குறித்து நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா காலத்தில் மக்களுக்கு ஏற்பட்ட நெருக்கடியை விட, இந்த தொற்றுநோய் மிகவும் பேரழிவை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பறவைக் காய்ச்சலின் எச்5என்1 வகை வைரசானது மிகவும் தீவிரமானது எனவும், அதன் மாதிரிகள் பசு, பூனை, மனிதர்கள் உள்ளிட்ட பாலூட்டிகளிடம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்காவின் டெக்சாஸ் (Texas) மாகாணத்தில் உள்ள பால் பண்ணையில் பணிபுரியும் ஒருவருக்கு, இந்த எச்5என்1 வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், குறித்த நபர் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கலாமென அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது அவருக்கு வைரஸ் தடுப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டெக்சாஸின் பார்மர் கவுண்டியில் சுமார் 1.6 மில்லியன் முட்டையிடும் கோழிகள் மற்றும் 337 ஆயிரம் குஞ்சுகள் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் குறித்த பண்ணையில் இருந்த அனைத்து உயிரினங்களும் அழிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், தற்போது பறவைக் காய்ச்சல் அபாயம் இல்லை எனவும், இந்த நிலை தொடர்பில் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருவதாக அமெரிக்க கால்நடை பராமரிப்பு துறை கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.