அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கு அனுமதி கிடைத்ததா..!
அரச ஊழியர்களுக்கு எதிரவ்ரும் வருடம் நிச்சயமாக சம்பள உயர்வு வழங்கப்படும். அரச ஊழியர்களுக்கு சலுகை வழங்க வேண்டியது அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு காலிமுகத்திடல் ஹோட்டலில் நேற்று (09) மாலை நடைபெற்ற #AskRanil இளைஞர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
இதன்போது, அரச அதிகாரிகளின் சம்பள அதிகரிப்புக்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. அதில் உண்மை இருக்கிறதா..? என எழுப்பப்பட்ட கேள்விக்கும் தொடர்ந்தும் பதிலளித்த ஜனாதிபதி,
அரச ஊழியர்களின் சம்பள உயர்வை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது. சம்பள அதிகரிப்பு கோரி கடந்த காலங்களில் வேலை நிறுத்தங்கள் முன்னெடுக்கப்பட்டன.
அதன்படியே சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஆராய குழுவொன்று நியமிக்கப்பட்டது. அந்த குழுவின் அறிக்கையின் பிரகாரமே சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
2022ஆம் ஆண்டு நாட்டில் நிதி இருக்கவில்லை. மொத்த தேசிய உற்பத்தியும் சரிந்தது. 2023 ஆம் ஆண்டில் மொத்த தேசிய உற்பத்தி 08 பில்லியன்களால் அதிகரித்தது.
அதனாலேயே அஸ்வெசும வழங்க முடிந்தது. இவ்வருடத்தின் ஆரம்பத்தில் சற்று வளர்ச்சி கிட்டியதால் 10 ஆயிரம் வரையில் அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கினோம். அரச ஊழியர்களுக்கு சலுகை வழங்க வேண்டியது அவசியம்.
2022 இல் பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்தது. அப்போது சம்பள அதிகரிப்பை வழங்க முடியாமல் போனது. அதனால் ரூபாவை பலப்படுத்தி சலுகைகளை வழங்குவோம்.
இப்போதும் கஷ்டமான இடத்திலேயே இருக்கிறோம். 2027 இல் தான் இதனை மேற்கொள்ளுமாறு ஐஎம்எப் வலியுறுத்தியது. ஆனால் நாம் 2025 இல் செய்யத் தீர்மானித்திருக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.