அவசரமாக கூட்டப்படும் அமைச்சரவை: ஆளுங்கட்சியினருக்கு ரணில் விடுத்த வேண்டுகோள்
ரணில் விக்ரமசிங்க தலைமையில் எதிர்வரும் 13 ஆம் திகதி காலை விசேட அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரியவருகின்றது.
இக்கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு அமைச்சர்களுக்கு ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் நிதியாண்டுக்கான பாதீடு எதிர்வரும் 13 திகதி நண்பகல் 12 மணிக்கு நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. இதற்கு முன்னதாகவே அமைச்சரவைக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், பாதீட்டின் உள்ளடக்கம் உள்ளிட்ட விடயங்களுக்கு அமைச்சரவையின் அனுமதி பெறப்படவுள்ளது.
13 ஆம் திகதி நிதி அமைச்சர் என்ற வகையில் அதிபரின் வரவு – செலவுத் திட்டஉரை மாத்திரமே நடைபெறும். மறுநாள் நவம்பர் 14 முதல் 21 வரை ஞாயிறு தினங்கள் தவிர்ந்து 7 நாட்கள் ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.
வரவுசெலவுத்திட்ட இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு நவம்பர் 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பி.ப. 6.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.
அதனையடுத்து, குழுநிலை விவாதம் நவம்பர் 22 ஆம் திகதி புதன்கிழமை முதல் டிசம்பர் 13 ஆம் திகதி புதன்கிழமை வரை ஞாயிறு தினங்கள் தவிர்ந்து 19 நாட்கள் இடம்பெறவுள்ளது.
அதற்கமைய, 2024 நியதியாண்டுக்கான வரவுசெலவுத்திட்ட மூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 13 ஆம் திகதி புதன்கிழமை பி.ப. 6 மணிக்கு இடம்பெறவுள்ளது.
பாதீட்டு கூட்டத்தொடர் காலத்தில் தனிப்பட்ட வெளிநாட்டு பயணங்களை தவிர்த்துக்கொள்ளுமாறும், வாக்கெடுப்பு நேரங்களில் கட்டாயம் சபையில் இருக்குமாறும் ஆளுங்கட்சியினருக்கு ரணில் விக்ரமசிங்கவினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.