சேவை இடைநிறுத்தப்படும் CEB உழியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இடைநிறுத்தப்பட்ட இலங்கை மின்சார சபை ஊழியர்களின் எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளது.
மின்சார சபையின் மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுப்பட்ட மின்சார ஊழியர்களின் சேவையே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளன.
அண்மையில் இடம்பெற்ற போராட்டத்தின் போது வாடிக்கையாளர்களுக்கு மின் கட்டணத்தை செலுத்துவதற்கு இடையூறு விளைவித்தமை மற்றும் காசாளர் கரும பீடத்தை அடைத்தமைக்காக 15 காசாளர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதாக மின்சார சபை நேற்று (19) அறிவித்தது.
மின்சார சபையை தனியார் மயமாக்கப் போவதாக அண்மையில் அதன் தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு நடவடிக்கையினை ஆரம்பித்திருந்தன.
இதன்படி, மின்சார சபையின் நிர்வாகத்தால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை மீறிச் செயற்படும் அல்லது சேவைகளுக்கு இடையூறு விளைவிக்கும் எந்தவொரு ஊழியரையும் பணி இடைநீக்கம் செய்து உரிய ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்குமாறு மின்சார அமைச்சர் கஞ்சன விஜேசேகர, இலங்கை மின்சார சபை நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.
எவ்வாறாயினும், மின்சார விநியோகம் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்ட போதிலும், அண்மைய வேலைநிறுத்தத்தின் போது நுகர்வோருக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் வகையில் தமது கடமைகளை செய்யாமல் தவித்த மின்சார சபை ஊழியர்களை அடையாளம் காண்பதற்கான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.