உச்சம் தொடும் தேங்காய் விலை…! தொடரும் அசமந்த போக்கு
நாட்டில் தேங்காய் உற்பத்தியில் ஏற்பட்ட சரிவு மற்றும் தேங்காய் விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்பு காரணமாக தினசரி தேங்காய் நுகர்வு குறைவடைந்துள்ளதாக அரச புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
உரப் பற்றாக்குறை, வெள்ளை ஈ, கடந்த ஆண்டு பெய்த கனமழையால் மகரந்தச் சேர்க்கை பிரச்சினைகள் மற்றும் காட்டு விலங்குகளிடமிருந்து அதிகரித்த சேதம் காரணமாக தேங்காய் உற்பத்தி குறைந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு தேங்காய் உற்பத்தி குறைவடைய அரசாங்கம் பல்வேறு காரணங்களை தெரிவித்து வரும் நிலையில், அரச அதிகாரிகளின் அசமந்த போக்கு இந்த நிலைமையை மேலும் மோசமடைய செய்யலாம் என பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
வவுனியா – வேலங்குளம் கோவில் புளியங்குளம் கிராமத்தில் நேற்றையதினம் இரவு உட்புகுந்த காட்டு யானைகள் காய்க்கும் நிலையில் இருந்த பெருமளவு தென்னை பயிர்களை சேதமாக்கிச் சென்றுள்ளது.
குறிப்பாக வேலங்குளம் கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட மடுக்குளம், கோவில்மோட்டை, செங்கற்படை, சின்னத்தம்பனை சிவநகர், குஞ்சுக்குளம், கோவில் புளியங்குளம் போன்ற கிராமங்களுக்குள் அண்மைய நாட்களில் தொடர்ச்சியாக செல்கின்ற காட்டு யானைகள் விவசாய நிலங்கள் மற்றும் தோட்ட பயிர்களை சேதமாக்கிச் செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று இரவும் குறித்த கிராமங்களுக்குள் உட்புகுந்த யானைகள் காய்க்கும் நிலையில் இருந்து தென்னை பயிர்களை நாசமாக்கிச் சென்றுள்ளன.
இவ்வாறான சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் நிலையில், தமக்கான தீர்வை எந்த ஒரு அதிகாரிகளும் இதுவரை முன்வைக்கவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் தமது கிராமத்தை சுற்றி யானை வேலியை அமைத்து தருமாறு பல்வேறு தரப்பிடமும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனினும் தமக்கு இதுவரை தீர்வு எதுவும் கிடைக்கவில்லை என பாதிக்கப்பட்ட கிராம மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.