பூகம்பத்தால் பாதித்த துருக்கியில் களமிறங்கிய இந்தியப்படை!
பூகம்பத்தால் மோசமாக பாதிக்கப்பட்ட துருக்கி மற்றும் சிரியாவில் இந்திய மீட்பு குழுவினர் ‘ஆபரேஷன் தோஸ்த்’ என்ற பெயரில் மீட்பு பணியை செய்து வருகிறார்கள்.
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பூகம்பத்தால் இதுவரை 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
பலர் உயிருடனும் மீட்கப்பட்டுள்ளனர். பூகம்பத்தால் மோசமாக பாதிக்கப்பட்ட துருக்கிக்கு தோழமை உணர்வோடு இந்தியா பல்வேறு உதவிகளை செய்துவருகிறது.
இடிபாடுகளைத் தோண்டி உயிர் பிழைத்தவர்களைக் கண்டுபிடிக்க இந்தியா உதவி செய்து வருகிறது. அத்துடன் இரண்டு நாட்களுக்கு முன்பு, இந்தியா மருத்துவப் பொருட்கள், மருத்துவர்கள் மற்றும் தேடல் மற்றும் மீட்புக் குழுக்களையும் துருக்கிக்கு அனுப்பியுள்ளது.
துருக்கிக்கு மட்டுமில்லாமல், சிரியாவுக்கும் இந்திய விமானப்படையின் சி-130ஜே விமானத்தில் நிவாரணப் பொருட்களை இந்தியா அனுப்பியுள்ளது.
சிரியாவுக்கு அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடை விதித்துள்ள நிலையில், அந்நாட்டுக்கு உதவிகளை அனுப்புவது குறித்த கேள்விக்கு, “ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரு எதிர்காலம்” என்ற ஜி-20 மந்திரத்தை இந்தியா பின்பற்றுகிறது என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது.
துருக்கி மற்றும் சிரியாவின் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் 250 பேரை இந்தியா ஏற்கனவே அனுப்பி உள்ளது. இந்தியா அனுப்பிய 135 டன் எடையுள்ள சிறப்பு உபகரணங்கள் மற்றும் பிற நிவாரணப் பொருட்களும் துருக்கியை வந்தடைந்துள்ளன.
NDRF இன் மூன்று தன்னார்வக் குழுக்கள், 150க்கும் மேற்பட்ட சிறப்புப் பயிற்சி பெற்ற பணியாளர்கள், ராம்போ மற்றும் அவர்களது தோழமையான நாய்ப் படை, சிறப்பு வாகனங்கள் மற்றும் பிற பொருட்களுடன் துருக்கியை அடைந்துள்ளனர்.
மேலும், இந்திய ராணுவத்தின் 30 படுக்கைகள் கொண்ட நடமாடும் மருத்துவமனை அமைப்பதற்கான பணியாளர்கள் மற்றும் உபகரணங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
மருத்துவமனையில் முழு செயல்பாட்டுக்காக எக்ஸ்ரே மற்றும் வென்டிலேட்டர்கள் போன்ற வசதிகள் வழங்கப்படும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
துருக்கியின் காசியான்டெப்பில் மீட்பு நடவடிக்கைகளில் NDRF குழுக்கள் உதவி செய்து வருகின்றனர். அதே நேரத்தில் மருத்துவ குழு Iskenderun என்ற பகுதியில் நடமாடும் மருத்துவமனையை அமைக்கிறது என்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள குழுக்களுக்கு உதவுவதற்காக, வெளிவிவகார அமைச்சகத்தின் அதிகாரிகள் குழுவொன்றும், துருக்கி மொழி பேசுபவர்கள் இருவரும் துருக்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.