உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கிலிருந்து விடுதலையான ரணில்!!
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் தாக்கல் செய்த வழக்குகளில் பிரதிவாதியாக இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கவும் இருந்தநிலையில், தற்போது அவரை விடுதலை செய்யுமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு மாவட்ட நீதிபதி மகேஷ டி சில்வாவின் உத்தரவுக்கமைய அதிபர் ரணில் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை தடுக்கத் தவறியமை, அதனால் ஏற்பட்ட சேதங்களுக்கான இழப்பீடு போன்ற விடயங்களுக்காக அதிபர் ரணில் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அதிபர் ரணில் சார்பாக முன்னிலையான சட்டத்தரணிகள் தனது கட்சிக்காரர் தற்போது அதிபராக உள்ளதுடன், ஒரு நாட்டின் அதிபர் மீது வழக்குத் தொடர முடியாது என பூர்வாங்க ஆட்சேபனையை முன்வைத்திருந்தனர்.
அதனை தொடர்ந்து, அதிபர் ரணில் விக்ரமசிங்க மீது தற்போது வழக்குத் தொடர முடியாது என மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.