கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள பாரிய திட்டங்கள்.!

இந்தியாவுடன் இலங்கை: கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள பாரிய திட்டங்கள் | Exchange Products South India Through Trinco Port

திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்து அதன் ஊடாக தென்னிந்தியாவின் உற்பத்திகளை பரிமாறிக் கொள்ள எதிர்பார்க்கப்படுவதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

போட்டித்தன்மை மிக்க விவசாயத் தொழில் துறையை உருவாக்குவதற்கு சிறிய குளங்களை புனரமைத்து, அவற்றைப் பயன்படுத்த விவசாயிகளுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கபில அத்துகோரலவின் அழைப்பையேற்று நேற்று (02) தம்லகமுவ பிரதேச செயலாளர் பிரிவின் கலமெடியாவ கிராமத்தின் நெல் அறுவடையைக் கண்காணிக்கச் சென்றிருந்த வேளையிலேயே அதிபர் ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்திருந்தார்.

தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த ரணில் விக்ரமசிங்க .

“இந்தியாவுடன் இணைந்து திருகோணமலையை அபிவிருத்தி செய்வதற்கான விசேட வேலைத்திட்டம் எம்மிடம் உள்ளதுடன் திருகோணமலை எண்ணெய் தாங்கி வளாகத்திற்கு மேலதிகமாக, இந்தியாவில் இருந்து குழாய் மூலம் எரிபொருளை விநியோகிக்கும் திட்டமும் உள்ளது.

எனவே திருகோணமலை துறைமுகத்தை கிழக்கின் பிரதான துறைமுகமாக அபிவிருத்தி செய்து அதன் ஊடாக தென்னிந்தியாவின் உற்பத்திகளை பரிமாறிக் கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது.

சுற்றுலா மட்டுமின்றி, வேலைவாய்ப்புகளை விரிவுபடுத்தி முதலீட்டு வலயங்களை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் திருகோணமலை மாவட்டத்தில் முழுமையான அபிவிருத்தி​யை ஏற்படுத்தும்.

மேலும், திருகோணமலை மாவட்டத்தில் விவசாய தொழில், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடிக் கைத்தொழில் போன்றவற்றை அபிவிருத்தி செய்வதற்கும் எதிர்பார்க்கிறோம்.

இப்பகுதியில் விவசாயத் தொழிலை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்த யோசனையைப் பெறவே இன்று இங்கு வந்தோம். இது தொடர்பாக நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பற்றி அறிந்து கொண்டேன்.

இது தொடர்பான அறிக்கைகளை வழங்குமாறு ஆளுநருக்கும் பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளேன். இந்த அபிவிருத்தித் திட்டப் பணிகள் 2025 ஆம் ஆண்டில் ஆரம்பிக்க எதிர்பார்க்கிறோம்.

விவசாயத் துறையை மேம்படுத்த வேண்டும். போட்டித்தன்மை மிக்க விவசாயத் தொழில் துறையை உருவாக்க வேண்டும். சிறிய குளங்களை புனரமைத்து, அவற்றைப் பயன்படுத்த விவசாயிகளுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.

மேலும், பயிர்ச்செய்கை மற்றும் அறுவடை குறித்தும் கவனம் செலுத்த வேண்டும். அதற்காக அரச மற்றும் தனியார் கூட்டு முயற்சியில் விவசாய நிலையங்களை விவசாய நவீனமயமாக்கல் மத்தியஸ்தானங்களாக கட்டமைக்க வேண்டும்.

ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஒரு விவசாய சேவை நிலையம் என்ற அடிப்படையில் 25 நிலையங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. அதற்கான ஆதரவை அமெரிக்காவின் பில் மெலிண்டா கேட்ஸ் மன்றமும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை இந்தியாவும் வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்கால இளைஞர்கள் சமூகம் ‘திறன் விவசாயத்தில்’ (Smart Agriculture) மீதே ஆர்வம் காட்டுகின்றனர். இரண்டு ஏக்கர் காணியை வழங்குவதால் மாத்திரம் விவசாயத்தில் ஈடுபடமாட்டர்கள். எனவே, புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய ‘திறன் விவசாயம்’ ( Smart Agriculture) மூலம் அவர்களை அணுக வேண்டும்.

முன்னைய காலத்தைப் போல் நாட்டிலிருந்து பயிர்கள் ஏற்றுமதி செய்யும் நிலையை அடைய வேண்டும். சுதந்திரத்திற்குப் பின்னர் நாம் ஏற்றுமதியில் போதிய கவனம் செலுத்தவில்லை. இப்போது நாம் அதை ஆரம்பிக்க வேண்டும்.

இந்த நாட்டின் மிகப்பெரிய விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டம் இன்னும் சில மாதங்களில் ஆரம்பிக்கப்படும். நன்னீர் மீன்பிடி மற்றும் சுற்றுலா வியாபாரம் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும்.

இலவச காணி உறுதிப்பத்திரம் வழங்கும் ‘உறுமய’ திட்டத்தையும் ஆரம்பித்துள்ளோம். இது மூன்று பகுதிகளாக செயற்படுகிறது. அதன்படி, இந்த வருடம் பிரச்சினைகள் அற்ற வகையில் அளவீட்டுப் பணிகளை மேற்கொண்டிருக்கு, சுவர்ண பூமி, ஜயபூமி காணி உறுதிபத்திர உரிமையாளர்களுக்கு முதலில் இலவச காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்படும்.

இதற்கிடையில், அளவீடு செய்யப்படாத காணிகளை அளவிடும் பணியும் முன்னெடுக்கப்படும். காணி பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்கவும் எதிர்பார்கிறோம்.

அதன்படி ஒரு பிரதேச செயலகத்தில் நாளாந்தம் 500-1000 காணி உறுதிப்பத்திரங்களை குறைந்த பட்சமாக பெற்றுக்கொடுக்க எதிர்பார்த்திருக்கிறோம்.” என்று அதிபர் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button