மீண்டும் கூடவுள்ள தேர்தல் ஆணைக்குழு – வழங்கப்பட்ட விசேட கடிதம்

மீண்டும் கூடவுள்ள தேர்தல் ஆணைக்குழு - வழங்கப்பட்ட விசேட கடிதம் | Sri Lanka 2023 Election Committee Resolution

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதியை தீர்மானிக்க தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மீண்டும் கூடவுள்ளது.

இது தொடர்பில் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு நிதி அமைச்சின் செயலாளர், அரசாங்க அச்சக மா அதிபர், காவல்துறைமா அதிபர் உள்ளிட்ட பல தரப்பினருக்கு இன்று (04) கடிதம் அனுப்பவுள்ளதாக ஆணைக்குழுவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இம்மாதம் 9ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்ட போதிலும், அன்றைய தினம் தேர்தலை நடத்த முடியாது என அண்மையில் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தது.

அதன்படி, நேற்று கூடி தேர்தலுக்கான திகதியை முடிவு செய்ய உள்ளதாக தேர்தல் ஆணையம் முன்னதாக குறிப்பிட்டது. எனினும் நேற்று காலை 10.30 மணியளவில் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தலைமையில் தேர்தல்கள் ஆணைக்குழு கூடியது.

தேர்தலை நடாத்துவதற்கு தேவையான நிதியை பெற்றுக்கொள்வது மற்றும் வாக்குச் சீட்டுகளை அச்சிடுவது தொடர்பில் அவதானம் செலுத்தி தேர்தல் நாள் தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

எவ்வாறாயினும், நிதியமைச்சின் செயலாளர் மற்றும் சட்டமா அதிபருக்கு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு காரணமாக உள்ளூராட்சி தேர்தல் திகதி நிர்ணயம் பிற்போடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

மீண்டும் கூடவுள்ள தேர்தல் ஆணைக்குழு - வழங்கப்பட்ட விசேட கடிதம் | Sri Lanka 2023 Election Committee Resolution

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் மூலம் 2023ஆம் ஆண்டு தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை தக்கவைக்க தடை விதித்து நிதியமைச்சின் செயலாளருக்கு உச்ச நீதிமன்றம் நேற்று தடை உத்தரவு பிறப்பித்தது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் சமர்ப்பிக்கப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரிப்பதற்கு அனுமதி வழங்கியதன் மூலம் குறித்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button