திட்டமிட்டப்படி தேர்தல் இடம்பெறும்: தேர்தல்கள் ஆணையாளர் அறிவிப்பு
திட்டமிட்டதற்கு அமைய மே மாதம் 6ஆம் திகதி உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடைபெறும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் குறித்து நீதிமன்றம் வழங்கும் உத்தரவுகளுக்கு அமைய செயற்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் பணிகள் தொடர்பில் தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான சகல பணிகளும் பூர்த்தியடைந்துள்ளன.
தபால்மூல வாக்களிப்புக்கான வாக்காளர் அட்டைகள் தபால் திணைக்களத்துக்கு ஒப்படைக்கப்பட்டு, அவை தற்போது விநியோகிக்கப்படுகின்றன.
எதிர்வரும் வாரமளவில் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை ஆணைக்குழுவுக்கு ஒப்படைப்பதாக அரச அச்சகத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
திட்டமிட்ட வகையில் எதிர்வரும் 22, 23 மற்றும் 24 ஆகிய திகதிகளில் தபால்மூல வாக்களிப்பு நடத்தப்படும்.
இந்த மூன்று தினங்களில் வாக்களிக்க தவறும் அரச உத்தியோகத்தர்கள் 28 மற்றும் 29 ஆகிய இரண்டு தினங்களில் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகத்தில் வாக்களிக்க முடியும்.
தபால்மூல வாக்களிப்புக்கு தகுதி பெற்றுள்ள அனைத்து அரச உத்தியோகத்தர்களும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து நீதிமன்றம் வழங்கும் உத்தரவுகளுக்கு அமைய செயற்படுகிறோம்.
திட்டமிட்ட வகையில் எதிர்வரும் மாதம் 6ஆம் திகதி உள்ளூராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்பு நடத்தப்படும். நியாயமானதும், சுதந்திரமானதுமான வகையில் தேர்தலை நடத்துதற்கு நாட்டு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.