இலங்கையின் ஜனாதிபதி தேர்தலுக்காக தம்மை தயார்படுத்தும் வெளிநாடுகள்
இலங்கையில் (Sri Lanka) எதிர்வரும் ஒக்டோபரில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் வெளிநாடுகளின் கவனம் உன்னிப்பாக இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை தற்போது, பொருளாதார முன்னேற்றத்திற்காக வெளிநாடுகளை நம்பியிருக்கும் நாடு என்பதே இதற்கான முக்கிய காரணமாகும்.
இது தொடர்பான செயற்பாடுகள் ஏற்கனவே ஆரம்பமாகியுள்ள நிலையில், சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகளின் தற்போதைய பயணம், இதில் ஒரு கட்டமாகவே அமைந்துள்ளதாக செய்தியாளர் தரப்புக்கள் கூறுகின்றன.
இலங்கையின் கடந்த காலத் தேர்தல்களிலும் வெளிநாடுகளின் முன்கூட்டிய கண்காணிப்பு மற்றும் செல்வாக்கு என்பன இருந்ததாக தகவல்களும் குற்றச்சாட்டுகளும் வெளியிடப்பட்டிருந்தன.
உதாரணமாக 2015ஆம் ஆண்டு, ஜனாதிபதித் தேர்தலில் தமது தோல்விக்கு இந்தியாவே காரணம் என்று மஹிந்த ராஜபக்ச கூறியதும், பின்னர் அதனை மறுத்து தமது நியாயத்தை அவர் கூறியிந்ததும் இங்கு குறிப்பிட்டத்தக்க அம்சங்களாகும்.
இந்நிலையில், தற்போது இலங்கைக்கு வந்துள்ள சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியினர், தனித்தனியே அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகளை அறிந்து வருகின்றனர்.
ஏற்கனவே, அவர்கள், இடதுசாரிக் கொள்கையை முன்னிலைப்படுத்தும் ஜேவிபி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியை சந்தித்துள்ளனர். ஏனைய கட்சிகளையும் அவர்கள் சந்தித்து வருகின்றனர்.
முன்னதாக, இலங்கை அரசியலில் வளர்ச்சிப்போக்கை கொண்டுள்ள தேசிய மக்கள் சக்தியினரை (NPP) இந்தியாவின் உயர்மட்டமும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது.
இவை யாவும் இலங்கையின் நலன் சார்ந்த விடயங்களுக்கு அப்பால், குறித்த நாடுகளின் மூலோபாய நலன்களுக்கான நடவடிக்கைகளாகும்.
இந்தியா, சீனாவை தவிர, அமெரிக்கா, பிரத்தானியா, ஜப்பான், பாகிஸ்தான் போன்ற ஏனைய நாடுகளும் இலங்கையின் தேர்தல்களில் தமது உன்னிப்பான கவனத்தை செலுத்தி வருகின்றன.
எனவே, ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பாக பல நாடுகளின் பிரதிநிதிகள் குறிப்பாக ஆளும் கட்சிகளின் பிரதிநிதிகள் இலங்கைக்கு பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.