எந்தத் தேர்தல் நடந்தாலும் ஐக்கிய மக்கள் சக்திதான் வெற்றிவாகை சூடும்!
உண்மையில் தேர்தல் மீதும், அரசியல் மீதும் மக்கள் நம்பிக்கை இழக்கவில்லை. இந்த அரசு மீதுதான் மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். அவர்கள் தேர்தல் ஒன்றை உடன் நடத்துமாறே கோரி நிற்கின்றார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
பொதுமக்களில் பெரும்பாலானோருக்கு தேர்தல் மற்றும் அரசியல் மீது தற்போது நம்பிக்கையில்லை என்று நுவரெலியா கிரேண்ட் ஹொட்டலில் நடைபெற்ற தேசிய சட்ட மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ கருத்துரைக்கையில், “தேர்தல்களை ஒத்திவைத்து ஆட்சியைத் தொடரலாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பகல் கனவு காண்கின்றார். தேர்தல் மீதும், அரசியல் மீதும் மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர் என்று ஜனாதிபதி பொய்யுரைக்கின்றார்.
தேர்தல் ஒன்றை நடத்தினால் மக்கள் ஆணை இந்த அரசுக்குக் கிடைக்காது என நூறு வீதம் தெரிந்த காரணத்தால்தான் ஜனாதிபதி இவ்வாறு பொய்யுரைக்கின்றார். உண்மையில் தேர்தல் மீதும், அரசியல் மீதும் மக்கள் நம்பிக்கை இழக்கவில்லை.