இலங்கையில் நிறுவப்படவுள்ள அணு உலைகள்: அணுசக்தி அதிகாரசபை இணக்கம்
ரஷ்யா, சீனா, டென்மார்க் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளின் நிறுவனங்கள் அணுசக்தியில் முதலீடு செய்ய முன்வந்ததை அடுத்து, இலங்கை அணுசக்தி அதிகாரசபை அணுசக்தி திட்டத்துக்கு இணக்கம் வெளியிட்டுள்ளதாக அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பங்களாதேசம் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் அணுசக்தி உற்பத்தியில் முதலீடு செய்துள்ள ரஷ்யா இலங்கையில் ஆலையை அமைப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது.
அண்மையில் இலங்கை வந்திருந்த ரஷ்யாவின் உயர்மட்டக் குழுவொன்று அணுசக்தித் துறையில் முன்மொழியப்பட்ட ஒத்துழைப்பு குறித்து இலங்கை அதிகாரிகளுடன் கலந்துரையாடியது.
இந்தநிலையில், குறித்த துறையில் இலங்கையர்களுக்கு திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி அளிக்க ரஷ்யா உதவி வழங்கவுள்ளது.
முன்மொழிவின்படி, ஒரு கொள்கை முடிவு எடுக்கப்பட்டால், மேம்பட்ட அணு உலைகளான சிறிய மட்டு உலைகள் இலங்கையில் நிறுவப்படும்.
எவ்வாறாயினும், 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை இந்த திட்டத்துக்கு செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.