எம்.பி.க்களின் பல மில்லியன் ரூபாய் மின்கட்டணம் நிலுவை!
பாராளுமன்ற உறுப்பினர்களின் உத்தியோகபூர்வ இல்லங்களுக்கான மின்சார விநியோகத்திற்காக கடந்த வருட இறுதிக்குள் அறவிடப்பட வேண்டிய 16 மில்லியன் ரூபா பணம் செலுத்தத் தவறியுள்ளதாக தெரியவந்துள்ளது.
2022ஆம் ஆண்டு தொடர்பான கணக்காய்வாளர் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் பிரகாரம், 74 மின் இணைப்புகளுக்கான கொடுப்பனவுகள் செலுத்தத் தவறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவற்றில் 29 இணைப்புகள் தொடர்பான 05 மில்லியன் ரூபா பணம், 06 வருடங்களாக அறவிடப்படவில்லை எனவும் மேலும் 30 இணைப்புகள் தொடர்பான 03 மில்லியன் ரூபா பணம் ஒரு வருடத்திற்கும் மேலாக அறவிடப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது.
இதேவேளை, 2022ஆம் ஆண்டுக்கான பொறியியல் கொடுப்பனவுகள், ஊக்குவிப்புக்கள் மற்றும் தற்காலிக கொடுப்பனவுகள் என்பனவற்றிற்காக முறையான அனுமதியின்றி 418 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் கொள்வனவு தொடர்பில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மேற்கொண்ட ஹெஜிங் கொடுக்கல் வாங்கல் காரணமாக கடந்த டிசம்பர் 31ஆம் திகதி வரை 14,028 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் 8.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை உரிமை கோரி கூட்டுத்தாபனத்திற்கு எதிராக தனியார் வங்கியினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கும் விசாரணையில் உள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.