சுற்றுச்சூழல் அனுமதி தொடர்பில் நாடளாவிய ரீதியில் விசாரணை.!
சுற்றுச்சூழல் அனுமதி பெறாத தொழிற்சாலைகளை கண்டறிவதற்காக நாடளாவிய ரீதியில் விசாரணைசுற்றுச்சூழல் அனுமதி பெறாத தொழிற்சாலைகள் தொடர்பில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் கழிவு முகாமைத்துவ பிரிவு முக்கியமான அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளது.
அவ்வகையில், சுற்றுச்சூழல் அனுமதி பெறாத தொழிற்சாலைகளை கண்டறிவதற்காக நாடளாவிய ரீதியில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை கழிவு முகாமைத்துவ பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகம் அஜித் வீரசுந்தர தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“ஹோமாகமவில் உள்ள தொழிற்சாலையில் ஒன்றில் அண்மையில் தீப்பரவல் ஏற்பட்டமை தொடர்பில் வெளியான தகவல்களை தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் குறித்த தொழிற்சாலை இயங்கி வந்துள்ளமை இதன்போது தெரியவந்துள்ளது. எந்த ஒரு தொழிற்சாலைகளின் சேவைகளை ஆரம்பிப்பதற்கு முன்பு சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டியது அவசியமாகும்.
எவ்வாறாயினும் இந்த உத்தரவை மீறி சில தொழிற்சாலைகள் இயங்கி வருவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறான தொழிற்சாலைகள் அடையாளம் காணப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.