இலங்கையின் ஏற்றுமதி துறைக்கு ஏற்படப்போகும் சிக்கல்
எளிமைப்படுத்தப்பட்ட பெறுமதி சேர் வரி (SVAT) முறைமை நீக்கப்படுவதை, ஏற்றுமதியாளர்களால் தாங்கிக்கொள்ள முடியாது என்று தேசிய ஏற்றுமதி சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு முதல் எளிமைப்படுத்தப்பட்ட பெறுமதி சேர் வரி (SVAT) முறைமை நீக்கப்படும் என்ற நிலைப்பாட்டை அரசாங்கம் எடுத்துள்ளது.
இதனால் ஏற்றுமதித்துறை பெரிதும் பாதிக்கப்படும் என்று, ஏற்றுமதியாளர்கள் சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழமையான பெறுமதி சேர் வரி முறைமையில் இருந்து எளிமைப்படுத்தப்பட்ட பெறுமதி சேர் வரி முறை மாறுபட்டதாக உள்ளது.
இந்த முறைமையின் மூலம், வணிகத்தில் ஈடுபடுகின்றவர்கள், செலுத்தப்பட்ட வரியின் மீள் பெறுகைக்கு நீண்டகாலம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாது செய்யப்படுவதுடன், வர்த்தகத்துக்கான பணப்பாய்ச்சல் ஓட்டம் தங்குதடையின்றி நிலவுகிறது.
2011 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த முறைமையினால் குறிப்பாக ஏற்றுமதித் துறையினர் தாமதங்களின்றித் தங்களது வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுக்கக்கூடியதாக இருந்தது.
தற்போது அது உடனடியாக நீக்கப்படுவதானது, இலங்கைக்கு அதிகபட்ச அந்நியச்செலாவணியைக் கொண்டுவருகின்ற ஏற்றுமதித் துறையைப் பாதிப்படையச் செய்யும்.
வரி கட்டமைப்பு மறுசீரமைப்பு வரவேற்கப்படுகின்ற போதும், அதனைக் கட்டம் கட்டமாகச் செய்ய வேண்டுமே அன்றி, ஏக சமயத்தில் நடைமுறைப்படுத்துவது பெரும் பாதிப்பை உருவாக்கும் என்று, ஏற்றுமதியாளர்கள் சம்மேளனம் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.