வெளிநாடு செல்லவிருக்கும் 5000 வைத்தியர்கள்: சுகாதார அமைச்சுக்கு பேரிடி
இலங்கையிலுள்ள அரச வைத்தியசாலைகளில் கடமையாற்றும் 5000 வைத்தியர்கள் வெளிநாடுகளில் மருத்துவம் செய்வதற்குத் தேவையான பரீட்சைகளில் சித்தியடைந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சுக்கு இது பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்க வைத்தியசாலைகளில் தற்போது 20,000 வைத்தியர்கள் பணிபுரிவதாகவும், அவர்களில் 5,000 பேர் வெளிநாடுகளுக்குச் சென்றால், சுகாதார அமைச்சுக்கு பெரும் சவாலை எதிர்கொள்ள நேரிடும் எனவும் குறிப்பிடப்படுகிறது.
ஐக்கிய இராச்சியத்தில் மருத்துவப் பயிற்சி பெறுவதற்குத் தகுதி பெற வேண்டிய 3500 பரீட்சார்த்திகளில் 750 பேர் இலங்கையர்கள் எனவும் அவர்களில் 550 பேர் பரீட்சையில் சித்தியடைந்துள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன, இப்பிரச்சினையை எதிர்கொள்வதற்கு மேலும் மேலும் பயிற்சி வைத்தியர்களை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் விசேட வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது கட்டுப்படுத்த முடியாத விடயம் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வைத்தியர்கள் வெளிநாடு செல்வதை தடுக்கும் வகையில் சம்பள முறையை திருத்தியமைத்து அவர்களுக்கு நிதி கொடுப்பனவுகளை வழங்குமாறு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க அரசாங்கத்திடம் யோசனை முன்வைத்துள்ளார்.
ஆனால் அந்த பரிந்துரை மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. அதற்கு பதிலளித்த பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன, “இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வரும் இவ்வேளையில் வைத்தியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதும் அவர்களுக்கு நிதி கொடுப்பனவுகளை வழங்குவதும் கடினமான விடயமாகும்.
எவ்வாறாயினும், இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு சுகாதார அமைச்சு அதிகபட்ச முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார்.