கல்வியை கைவிட்டவர்களுக்கு இலவச தொழில் – சிறிலங்காவில் புதிய திட்டம்
பொருளாதார நெருக்கடிகள் உள்ளிட்ட பல காரணங்களால் பாடசாலை கல்வியை இடை நடுவில் கைவிட்ட மாணவர்களுக்கு இலவச தொழிற் பயிற்சிகளை வழங்கி தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்குமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் தினேஷ் குணவர்த்தன பணித்துள்ளார்.
நேற்று(19) திங்கட்கிழமை கொழும்பு மகரகம பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, பல்வேறு காரணங்களால் பாடசாலைக் கல்வியை இடை நடுவில் கைவிட்ட சிறுவர்கள் குறித்து முறையான அறிக்கை ஒன்றை தயாரித்து இலவச பயிற்சி வகுப்புக்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
கல்வியை இடை நடுவில் கைவிட்டுச் சென்றதால் அவர்களின் தனிப்பட்ட திறமைகளை வெளிக்காட்ட முடியாமலும், சமூகத்தில் பிரச்சினைகளை தோற்றுவிக்கவும் அது வழிவகுக்கும்.
இது தொடர்பில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்களிலும் அறிக்கை பெற வேண்டியது கட்டாயமாகும்.
மாணவர்கள் இவ்வாறு விலகிச் செல்வதற்கு காரணம் என்ன என்பதைக் கண்டறிய வேண்டும்.
பாடசாலையை விட்டு வெளியேறும் மாணவர்களுக்கு முறையான தொழில் பயிற்சி, வழிகாட்டல்கள் மற்றும் இலவச பயிற்சி நெறிகள் ஏற்பாடு செய்வதன் மூலம் அவர்களுக்கு வளமான எதிர்காலத்துக்கு அது வழிவகுக்கும் என்றார்.