இன்றைய எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு
நாட்டில் பல தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போதிலும், எரிபொருள் விநியோகத்தில் எவ்வித தடையும் இன்றி விநியோக நடவடிக்கைகள் சீராக முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
வரி அதிகரிப்பு உள்ளிட்ட அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல தொழிற்சங்கங்கள் இணைந்து இன்று முன்னெடுக்கும் வேலை நிறுத்தப் போராட்டத்தின் காரணமாக பல துறைகள் நாட்டில் முடங்கியுள்ளன.
எனினும், எரிபொருள் விநியோகம் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், போதுமான அளவு பெட்ரோல் மற்றும் டீசல் கையிருப்பில் உள்ளதென இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெட்ரோலிய சேமிப்பு முறையத்தின் தலைவர் எம். யூ. மொஹமட் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தற்போது, 6,600 லீட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் இருப்பை கொண்ட 300 பௌசர்கள் வழக்கமான எரிபொருள் விநியோகத்திற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதென எம். யூ. மொஹமட் அறிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.