குடும்பமாக ஜேர்மனியில் குடியேறலாம்: மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்..!
சில நாடுகள் புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுத்துவரும் நிலையில், ஜேர்மனியோ அதற்கு நேர் மாறாக, புலம்பெயர்வோரைக் கவர்வதற்காக சட்டம் ஒன்றையே நிறைவேற்றியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைச் சாராத புலம்பெயர்வோர், ஜேர்மனிக்கு வருவதை எளிதாக்கும் வகையில், ஜேர்மன் நாடாளுமன்றம் சட்டம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.
ஏஞ்சலா மெர்க்கலில் கன்சர்வேட்டிவ் கட்சியினரும், வலது சாரி AfD கட்சியினரும், அந்த சட்டத்துக்கு எதிராக வாக்களித்தனர்.
ஏற்கனவே புகலிடம் நிராகரிக்கப்பட்டும் ஜேர்மனியில் வாழ்வோரையும் இந்த சட்டம் ஜேர்மனியில் வேலை செய்ய அனுமதிக்கும் என்று கூறி கன்சர்வேட்டிவ் கட்சியினரும், இது புலம்பெயர்தல் நாடு அல்ல என்று கூறி AfD கட்சியினரும், சட்டத்துக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.
ஆனால், ஆளுங்கட்சியினரைப் பொருத்தவரை, இது ஒரு கூட்டணி ஆட்சி, சேன்சலர் ஓலாஃபின் SPD கட்சி, Green கட்சி மற்றும் liberal கட்சிகள் இணைந்துதான் ஆட்சி நடத்துகின்றன.
பருவநிலை மாற்றம் போன்ற விடயங்களில் Green கட்சி மற்றும் liberal கட்சிகளுக்குள் பயங்கர கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஆனாலும், இரண்டு காட்சிகளுமே ஓலாஃபின் SPD கட்சியைப் போல புலம்பெயர்தலுக்கு ஆதரவாகவே உள்ளது சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு பெரிதும் உதவியாக அமைந்துள்ளது எனலாம்.
புதிய சட்டம், ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாத புலம்பெயர்வோரும் ஜேர்மனிக்கு வேலை செய்ய வருவதை எளிதாக்குகிறது.
கனடாவைப் போல, புள்ளிகள் அடிப்படையிலான புலம்பெயர்தல் அமைப்பு, வயது, திறன், கல்வித்தகுதி மற்றும் ஜேர்மனியுடனான தொடர்பு ஆகியவற்றை கருத்தில் எடுத்துக்கொள்ளும்.
இதனால், வேலைக்கான அனுமதி இருந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி, புலம்பெயர்வோர் ஜேர்மனிக்கு எளிதாக வரமுடியும்.
கூடுதல் சிறப்பம்சம் என்னவென்றால், அப்படி வேலைக்கு வரும் புலம்பெயர்வோர், தங்கள் மனைவி பிள்ளைகளை மட்டுமல்ல, தங்கள் பெற்றோரையும் ஜேர்மனிக்கு அழைத்துவரலாம் என்பது குறிப்பிடத்தக்கது.