அரச நிறுவனங்களை கண்காணிப்பதற்கு விசேட பிரிவு

அரச நிறுவனங்களை கண்காணிப்பதற்கு விசேட பிரிவு

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் உட்பட நாட்டுக்கு வரி வருமானத்தை ஈட்டும் நிறுவனங்களை கண்காணிப்பதற்கு விசேட பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டுமென தேசிய பொருளாதாரம் மற்றும் பௌதீகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

அரச வரி வருமானத்தை அதிகரிப்பதற்கு செயற்படாத அதிகாரிகள் தொடர்பில் அரசாங்கம் கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (26) நடைபெற்ற ஊடக சந்திப்பில் தேசிய பொருளாதாரம் மற்றும் பௌதீகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் மஹிந்தானந்த அளுத்கமகே இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த மஹிந்தானந்த அளுத்கமகே,

“ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின்
பிரதிநிதிகளுடன் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.
அந்தக் கலந்துரையாடல் மிகவும் வெற்றிகரமாக அமைந்தன. அரசாங்கம் மற்றும் நாணய நிதியத்திற்கும் இடையிலான ஒப்பந்தத்தின் பிரகாரம் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்து நாட்டுக்கு அறிவிக்க உள்ளனர்.சர்வதேச நாணய நிதியம் பரிந்துரைத்த மூன்று முக்கிய விடயங்கள் உள்ளன. அதன்படி, பணவீக்கத்தை ஒற்றை இலக்கத்துக்கு கொண்டு வருதல், அந்நியச் செலாவணிக் கையிருப்பை அதிகரித்தல், அரச வரி வருமானத்தை அதிகரித்தல் அவசியமாகும்.

கடந்த காலங்களில் 95% ஆக இருந்த உணவுப் பற்றாக்குறை, தற்போது -5% ஆகக் குறைந்துள்ளது. பணவீக்கம் 70% லிருந்து 2.6% ஆகவும், 20 மில்லியன்
டொலர்களாக இருந்த அந்நியச் செலாவணிக் கையிருப்பு, 04 பில்லியன்
டொலர்களாகவும் அதிகரித்துள்ளது. எனினும், சர்வதேச நாணய நிதியம் அரச
வருமானத்தை அதிகரிப்பதில் அதிக கவனம் செலுத்தியுள்ளது. அதற்கு முதன்மைக் காரணம், அரசின் வருமானத்தில்  90% வரி மூலம் வசூலிக்கப்படுகின்றமையாகும்.

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திலிருந்து 1667 பில்லியன் ரூபாவும்,
இலங்கை சுங்கத்திடமிருந்து 1217 பில்லியன் ரூபாவும், மதுவரித்
திணைக்களத்திலிருந்து 217 பில்லியன் ரூபா என்ற வகையில் 3101 பில்லியன்
ரூபா வருமான இலக்கை அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

ஆனால் இதுவரை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் சுமார் 956 பில்லியன்
ரூபாவும், இலங்கை சுங்கம் சுமார் 578 பில்லியன் ரூபாவும், மது வரித்
திணைக்களம் சுமார் 109 பில்லியன் ரூபாவும், மொத்தமாக, கிட்டத்தட்ட 1643
பில்லியன் ரூபா மாத்திரமே வசூலித்துள்ளன.

சேகரிக்கப்பட்டுள்ள முறைமையின்படி இந்த வருட இறுதிக்குள் சுமார் 2380
பில்லியன் ரூபாவை மாத்திரமே உரிய இலக்கில் இருந்து பெற முடியும் என
அரசாங்கம் நம்புகிறது. இதனால் 637 பில்லியன் ரூபா பற்றாக்குறை ஏற்பட
வாய்ப்புள்ளது.

குறிப்பாக, இந்த வருமானத்தை ஈட்டுவது சாத்தியமற்றதல்ல. எனவே, அரசாங்கம் எதிர்பார்த்த இலக்கை எட்டுவதற்கான சாத்தியக்கூறுகளை நாங்கள் ஒரு குழுவாக
ஆராய்ந்தோம். அதன்போது அரசாங்கத்திற்கு அதிக வருவாயை வழங்கும் உள்நாட்டு இறைவரி திணைக்களம், சுங்க மற்றும் மதுவரித் திணைக்களம் ஆகியோர் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டன.

2022 ஆம் ஆண்டு இந்த நிறுவனங்கள் உரிய வரியை முறையாக வசூலிக்கத்
திட்டங்களை தயாரித்திருந்தால் இந்த வருமானத்தை எட்டியிருக்க முடியும்
என்பது அதன்போது தெரியவந்தது.

கடந்த ஆண்டு (2022) தனிநபர் வரிக் கோப்புகளின் எண்ணிக்கை இரண்டு
இலட்சத்து தொண்ணூற்று இரண்டாயிரமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இந்தக் கோப்புகளில் 10%  சதவீதமானவர்கள் மாத்திரமே ஒரு ரூபாவேனும் வரி
செலுத்துகின்றனர்.

அரச வரி வருமானத்தை அதிகரிக்க செயற்படாத அதிகாரிகள் குறித்து அரசாங்கம் கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டும். இந்த நிறுவனங்களில் நடக்கும் முறைகேடுகளை கட்டுப்படுத்தினால், 500 பில்லியன் வருமானத்தை உயர்த்தும் திறன் எம்மிடம் உள்ளது.

இந்த நிறுவனங்களின் திறமையின்மை மற்றும் முறைகேடுகள் காரணமாக அரசாங்கம் இலங்கை சுங்கத்தில் இருந்து வருடமொன்றுக்கு சுமார் 360 பில்லியன் ரூபாவையும், மதுவரித் திணைக்களத்தில் இருந்து வருடத்திற்கு சுமார் 60 பில்லியன் ரூபாவையும் இழந்துள்ளது.

உதாரணமாக, இந்த நாட்டின் மதுபான தொழிற்சாலைகள் ஒவ்வொரு மாதமும் சுமார் 50 மில்லியன் மது போத்தல்களை உற்பத்தி செய்கின்றன. ஆண்டுக்கு 540-600 மில்லியன் மது போத்தல்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆனால் இந்த உற்பத்தியில் 40% வேறு வழிகளில் வெளியே செல்கின்றன. இதன் ஊடாக அரசாங்கத்துக்கு வரி கிடைப்பதில்லை.

இதனைத் தடுப்பதற்காக 2018 இல், பாதுகாப்பு ஸ்டிக்கர் ஒட்டும் முறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் முதல் சில மாதங்களில் அரசின் வருமானம் அதிகரித்தாலும், போலி ஸ்டிக்கர்களால் மதுவரித் திணைக்களத்தின் வருமானம் மீண்டும் 40% குறைந்துள்ளது. மதுவரித் திணைக்களம் மேற்பார்வைக் குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டு பணிப்புரைகள் விடுக்கப்பட்ட பின்னர், 40,000 இற்கும் மேற்பட்ட போலி மது போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த நிறுவனங்களில் பணிபுரியும் ஒரு சில அதிகாரிகளின் திறமையின்மையினால், அரசியல்வாதிகள் மீது மக்களால் குற்றம் சுமத்தப்படுவதாக நாம் தொடர்ந்து கூறுகின்றோம். எனவே, இந்த நிறுவனங்களின் செயல்பாடுகளை கண்காணிக்க முறையான திட்டம் தயாரிக்கப்பட்டால், அரச வருமானத்தை அதிகரிக்க முடியும்.

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மாத்திரம் 904 பில்லியன் ரூபா வரிகளை அறவிட வேண்டியுள்ளது. அரசாங்கத்திற்கு வரி செலுத்தாமல் நான்கு மேன்முறையீடுகளை சமர்ப்பிக்கக்கூடிய ஒரே நாடு இலங்கை மாத்திரமே ஆகும். அந்த 04 மேன்முறையீடுகளை ஆய்வு செய்ய 15 ஆண்டுகள் செல்லும். அப்படியானால், இந்நாட்டு மக்கள் எவ்வாறு வரி செலுத்த முடியும்? இதன் காரணமாக 904 பில்லியன் ரூபாவை வசூலிப்பது 15 ஆண்டுகளாக தாமதமாகியுள்ளது.

எனவே, இந்த நிறுவனங்களை கண்காணிக்கவும், ஒழுங்குபடுத்தவும் தனிப் பிரிவு ஏற்படுத்தப்பட வேண்டும். இது தொடர்பில் துறைசார் மேற்பார்வைக் குழு என்ற வகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் அறிக்கை ஒன்றையும் சமர்ப்பித்துள்ளோம். வரி விதிப்பு உயர்வுக்குப் பிறகு, 10 இலட்சம் புதிய வரிக் கோப்புகள் திறக்கப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்தது. ஆனால் தற்போது, பத்தாயிரம் கோப்புகள் மாத்திரமே புதிதாக திறக்கப்பட்டுள்ளன.அரச வருமானம் அதிகரிப்பதை நாம் காணவில்லை. உள்நாட்டு இறைவரித் திணைக்களம் கவனம் செலுத்தாத பிரதான நிறுவனங்களும் வர்த்தகர்களும் இந்நாட்டில் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் அரசுக்கு வரி செலுத்துவதில்லை. உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திடம் இவற்றைக் கவனிப்பதற்கான உரிய வேலைத்திட்டமும் இல்லை.

நாட்டு மக்களுக்கு மானியங்கள் வழங்குதல், அபிவிருத்தி நடவடிக்கைகள்,
அரசாங்க ஊழியர்களின் சம்பளம் வழங்குதல் போன்ற அனைத்து விடயங்களும் அரச வரி வருமானத்தின் மூலமே மேற்கொள்ளப்படுகின்றன. வரி வருமானத்தை அதிகரிப்பது குறித்து உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மீண்டும் சிந்திக்க வேண்டும்.

வரி வசூலிக்கும் முறை இல்லாதது குறித்து அரசாங்கம் கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.” என்று தேசிய பொருளாதாரம் மற்றும் பௌதீகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button