அரச சேவை குறித்து ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு!

எமது நாட்டின் அரச சேவையை முறையான அரச பொறிமுறையாக மாற்றும் சவால் எம்முன் உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

நாரஹேன்பிட்டியில் (Narahenpita) நேற்று நடைபெற்ற மாவட்ட செயலாளர்/அரசாங்க அதிபர்களின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, ”அரசாங்க அதிபரில் இருந்து மாவட்டச் செயலாளர் என பதவிப் பெயர் மாற்றம் பெற்ற இந்த சேவையானது 200 வருடங்கள் பழமையானது, எமது நாட்டை புதிய திசையில் வழிநடத்துவதில் பெரும் பங்காற்றியுள்ளது.

இருப்பினும், இறுதி நோக்கம் மற்றும் இலக்கு தொடர்பில் திருப்தியடையும் வகையில் தற்போதைய நிலைமை இல்லை, அரச நிறுவனமொன்றில் நியாயமான சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று மக்களுக்கு சிறிதும் நம்பிக்கை இல்லை, அரசு என்ற வகையில் முழுக் கட்டமைப்பும் சரிவைக் கண்டுள்ளது.

சரிவடைந்திருக்கும், கட்டமைப்பை மீள உருவாக்க நாம் தயாரா? இல்லையா? என்பது குறித்து எம்மை நாமே கேள்வி கேட்டுக்கொள்ள வேண்டும். மக்கள் ஆணையின் எதிர்பார்ப்புகளுக்கு அரசியல் அதிகாரம் மட்டுமல்ல, அரச சேவையும் பொறுப்புக் கூற வேண்டும்.

அரச சேவையில் இருக்கின்ற கதிரை தொடர்பான பிரச்சினை எனக்கு இல்லை, கதிரையில் அமர வைப்பதற்கு யார் இருக்கின்றார்கள் என்ற பிரச்சினையே எனக்கு இருக்கின்றது.

உலகில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை உள்வாங்கி, அவற்றுக்கு இசைவான மாற்றங்களை செய்துகொண்டு, தமது துறைக்கு தலைமைத்துவம் வழங்கி அதனை வெற்றியை நோக்கி வழிநடத்தும் கதிரைகள் வெற்றிடமாக காணப்படுகின்றது.

எனது இந்திய (India) விஜயத்தின் போது ​1,500 அதிகாரிகளை ​இந்தியாவிற்கு அனுப்பி பயிற்சி அளிக்க இணக்கம் எட்டப்பட்டது. அடுத்த வருடத்தில் உயர்தரத்தில் சித்தியடையும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு வெளிநாட்டில் கல்வி கற்பதற்கு அரசாங்கத்தின் புலமைப்பரிசில்களை வழங்க எதிர்பார்க்கின்றோம்.

சில நிறுவனங்கள் மற்றும் பதவிகள் எந்த அடிப்படையில் உருவாக்கப்பட்டன என்பது பிரச்சினையாக உள்ளது, எமது நாட்டின் அரச சேவையை முறையான அரச பொறிமுறையாக மாற்றும் சவால் எம்முன் காணப்படுவதால், அதற்கான புதிய வியூகம் ஒன்று அவசியமாகின்றது.

எமது நாட்டில் தற்போதுள்ள அரச நிறுவனங்களை மீளாய்வு செய்வதற்கான புதிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது, அரசியல் செல்வாக்குகளை பொருட்படுத்தாமல் அவை தொடர்பிலான தீர்மானங்கள் எடுக்கப்படும்.

அரச சேவையை மட்டுப்படுத்தும் எதிர்பார்ப்பு எனக்கு இல்லை, ஆனால் அரச சேவையை நடத்திச் செல்வதற்கான செலவில் பிரச்சினைகள் இருப்பதால், அரச சேவையை ஒரே நிலைப்பாட்டில் உறுதியுடன் இருந்து முறையான பொறிமுறைக்கு கொண்டு வர வேண்டும்.

இந்தப் பணிகளை நடைமுறைப்படுத்த அரசியல் அதிகார அடிப்படையில் எனது அதிகபட்ச பங்களிப்பை வழங்குவதுடன், அரச அதிகாரிகளின் பங்களிப்பே இந்தப் பணிகளின் வெற்றிக்கு வழிவகுக்கும்.

மக்கள் ஆணையின் 80% எதிர்பார்ப்புகளை அரச உத்தியோகத்தர்களே வெளிப்படுத்தியுள்ளனர் என்ற வகையில், அரசியல் அதிகார தரப்பின் பணிகளுக்கு அவர்கள் இணக்கம் மற்றும் அங்கீகாரத்தை வழங்கியுள்ளனர்.எனவே, இவை இரண்டும் இருவேறு முரண்பாடான குழுக்கள் அல்ல இரண்டும் இணக்கமான குழுக்கள்.

அதன்படி, அரசியல் அதிகாரம் மற்றும் பொதுச் சேவையின் எதிர்பார்ப்புக்கள் மற்றும் இலக்குகள் சமநிலையானதாக காணப்படுவதை கடந்த மக்கள் ஆணை வெளிப்படுத்தியிருப்பதால், இரு தரப்பினராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட பணியே எம்முன் உள்ளது.

மக்களுடன் தொடர்புபடும் திட்டங்கள் மீளாய்வு செய்யப்பட வேண்டும். டிஜிட்டல் அடையாள அட்டை திட்டம் விரைவுபடுத்தப்பட்டு, புதிய வருடத்தின் ஜனவரி முதலாம் திகதி முதல் ‘Clean Srilanka’ திட்டத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கின்றோம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button