GOVPAY செயலி அறிமுகத்தினால் ஏற்பட்டுள்ள பாதக விளைவு
போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு விதிக்கப்படும் அபராதங்களைச் செலுத்துதல் உள்ளிட்ட சேவைகளுக்காக அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட GOVPAY செயலியினால் அஞ்சல் திணைக்களம் பெருமளவான வருமானத்தை இழந்து வருவதாக ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், அஞ்சல் துறையில் காணப்படும் நவீன வசதிகள் மூலமாகவும் இந்த சேவைகளைப் பெறமுடியும் என அந்த முன்னணியின் ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த புதிய செயலி ஊடாக அஞ்சல் திணைக்களம் கணிசமான அளவு வருமானத்தை இழக்கின்ற போதிலும், அனைத்து வருமானமும் திறை சேரியைச் சென்றடைவதால் அரசாங்கம் இந்த சேவையினை ஆதரிக்கும் என அஞ்சல் மா அதிபர் ருவன் சத்குமார தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து விதிகளை மீறுகின்றவர்களுக்கு விதிக்கப்படுகின்ற அபராதங்களை இணையவழியில் செலுத்தும் வசதி கடந்த 11 ஆம் திகதி முதல் பரீட்சார்த்தமாக 12 இடங்களில் நடைமுறைபடுத்தப்பட்டது.
அரசாங்கத்தின் GOVPAY செயலி ஊடாக உடனடியாக அபராதத்தைச் செலுத்துவதற்கு வழிசமைக்கப்படுவதுடன், அபராதம் செலுத்தப்பட்ட அடுத்த நொடியே வாகன சாரதியின் சாரதி அனுமதிப் பத்திரம் காவல்துறையினரால் விடுவிக்கப்படுமெனத் தெரிவிக்கப்படுகிறது.
அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ள 30,000 பேர்
இலங்கையின் அரச சேவையில் புதிதாக 30,000 பேரை இணைத்துக் கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
மன்னாரில் (Mannar) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ”5 முதல் 6 வருடங்களுக்கு பின்னர் தற்போது 30,000 பேரை அரச சேவையில் சேர்க்கவுள்ளோம்.
இதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு பின்னால் செல்ல வேண்டிய அவசியமில்லை.
பத்திரிகைகளில் விளம்பரப்படுத்துவோம், விண்ணப்பங்களை அனுப்புங்கள் அதன்படி பரீட்சைக்கு தோற்றி அதிக மதிப்பெண் பெறுபவர்களுக்கு நாங்கள் தொழிலை வழங்குவோம்.
விசேடமாக அரச சேவையில் தமிழ் பேசுபவர்களின் பற்றாக்குறை உள்ளது. காவல் நிலையங்களிலும் இந்தப் பிரச்சினை காணப்படுகின்றது.
எனவே, 2,000 புதிய காவல்துறையினர் பணியமர்த்தப்படுவார்கள், தமிழ் தெரிந்த உங்கள் பிள்ளைகளை காவல்துறை பணியில் இணைய செய்யுங்கள்.
இது ஒரு மரியாதைக்குரிய வேலையாகும். நம் நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் வேலை. மேலும் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழ் பேசத் தெரிந்தவர்கள் அரச பணியில் சேர வேண்டும். ஒன்றாக இந்த நாட்டைக் கட்டியெழுப்புவோம். எங்களுடைய நாட்டின் சட்டம் அனைவருக்கும் சமமானது என்பதை நாங்கள் நடைமுறைப்படுத்துவோம்.“ என தெரிவித்தார்.