ஹிருணிகாவுக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு!
நீதிமன்றத்தை அவமதித்தாக தெரிவித்து முன்னாள் நாடாமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் நீதிமன்றம் அறிவிக்கும் தினத்தில் நேரில் முன்னிலையாகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊவா மாகாண முன்னாள் ஆளுநர் ஹர்டி ஜமால்டின் தாக்கல் செய்த முறைப்பாடு இன்று (11) மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் சஷி மகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அப்போது, பிரதிவாதி திருமதி ஹிருணிகா பிரேமச்சந்திர சார்பில் ஆஜரான சட்டத்தரணி, இந்த வழக்கு தொடர்பான எதிர் ஆட்சேபனைகளை தாக்கல் செய்வதற்கு கால அவகாசம் கோரினார்.
அதன்படி, நவம்பர் 29ஆம் திகதிக்கு முன் ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணைகளை டிசம்பர் 4ஆம் திகதி மீண்டும் எடுத்துக்கொள்வதாக அறிவித்தனர்.
அத்துடன், பிரதிவாதியான ஹிருணிகா பிரேமச்சந்திர, வழக்கு விசாரணை தினத்தன்று நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெண் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், ஹிருணிகா பிரேமச்சந்திர, கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர், இந்த உத்தரவை விமர்சித்ததாக முறைப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் நீதிமன்றத்தை ஹிருணிகா பிரேமச்சந்திர, அவமதித்துள்ளதாகவும், விசாரணை நடத்தி அவருக்கு உரிய தண்டனையை வழங்க வேண்டும் என கோரி இந்த முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.