அத்தியாவசிய பொருட்கள் உட்பட இறக்குமதி பொருட்கள் தொடர்பான தகவல்
அத்தியாவசிய பொருட்கள் உட்பட இறக்குமதி பொருட்களின் மொத்த விலை தற்போது பத்து சதவீதம் அளவில் வீழ்ச்சி கண்டிருப்பதாக அத்தியாவசிய பொருள் இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
அமெரிக்க டொலருக்கு இணைவாக ரூபாவின் பெறுமதி ஸ்திரத்திரமடைந்துள்ளமையே இதற்கான காரணமாகும்.
எனினும் பொருட்களின் மொத்த விலை குறைந்துள்ள போதிலும் சில்லறை விலையில் தாம் வித்தியாசத்தை உணரவில்லை என நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு பால்மாவின் விலை நேற்று முதல் குறைக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் அதிகார சபையின் அறிவுறுத்தலுக்கு அமைய மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் நோக்குடன் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக உள்நாட்டு பால்மா உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. புதிய விலை விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இதேவேளை புதிய விலையின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட பால்மாவை சந்தைக்கு விநியோகிக்கவுள்ளதாக பால்மா இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த முதலாம் திகதி முதல் இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ பால்மா பக்கெட் ஒன்றின் விலை 200 ரூபாவினாலும் 400 கிராம் பால்மா பக்கெட்டின் விலை 80 ரூ பாவினாலும் குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.