இந்தியாவை வெல்வது குறித்து – வெளிப்படையாக பேசிய ஸ்மித்
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆஷஸ் தொடரை விட தங்களுக்கு முக்கியமானது என அவுஸ்திரேலியா வீரரான ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான துடுப்பாட்ட தொடரை கைப்பற்றிய இந்திய அணி, அடுத்ததாக அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்க உள்ளது.
அவுஸ்திரேலியா அணி இந்திய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.
நாளை ஆரம்பமாகவுள்ள இந்தியா – அவுஸ்திரேலியா இடையேயான துடுப்பாட்ட தொடர், மார்ச் 22ம் திகதி வரை நடைபெற உள்ளது. சமகால போட்டிகளில் தலைசிறந்த இரு அணிகள் இடையேயான இந்த தொடர் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இதனால் முன்னாள், இந்நாள் துடுப்பாட்ட வீரர்கள், துடுப்பாட்ட வல்லுநர்கள் என பலரும் இப்போதே இந்தியா அவுஸ்திரேலியா இடையேயான தொடர் குறித்தான தங்களது கருத்துக்களையும் கணிப்புகளையும் வெளிப்படையாக வெளிப்படுத்திவருகின்றனர்.
அதே போல் கடந்த 2004ம் ஆண்டிற்கு பிறகு இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரில் அவுஸ்திரேலிய அணி, வெற்றிபெறாத நிலையில் அந்த அணியின் முன்னாள் வீரர்கள் பலர் ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.
அந்தவகையில், இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடர் குறித்து பல்வேறு விடயங்களை பகிர்ந்த அவுஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரரான ஸ்டீவ் ஸ்மித், இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆஷஸ் தொடரை விட தங்களுக்கு முக்கியமானது என தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஸ்டீவ் ஸ்மித் தெரிவிக்கையில் , “டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்வது கடும் சவால் நிறைந்தது.
இந்திய மண்ணில் நடைபெறும் டெஸ்ட் தொடரை வெல்வது சாதரண விடயம் அல்ல. இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்வது எங்களுக்கு ஆஷஸ் தொடரை விட அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. குறித்த டெஸ்ட் தொடரை கைப்பற்ற எங்களால் முடிந்தவரை கடுமையாக போராடுவோம்” என்று தெரிவித்தார்.