75ஆவது சுதந்திர தின விழாவுக்காக செலவிடப்பட்ட தொகையை வெளியிட்ட ஜனாதிபதி செயலகம்!
இலங்கையின் 75 ஆவது தேசிய சுதந்திர தினத்தின் உத்தியோகபூர்வ அரச விழாவுக்காக அரசாங்கம் செலவிட்ட மொத்தத் தொகை 11,130,011 ரூபா 29 சதம் என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
கடந்த காலங்களில் அரச கொண்டாட்டங்களுக்காக செலவிடப்பட்ட தொகையை விட இந்த ஆண்டு சுதந்திர தின விழாவுக்கு மிகக் குறைவான தொகையே அரசாங்கம் செலவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
சுதந்திர வைபவத்துக்காக அரசாங்கம் 5.8 மில்லியன் ரூபாவை செலவிட்டதாக வெளியான செய்தி முற்றிலும் பொய்யானது எனவும், கல்வி அமைச்சு சுதந்திர வைபவத்துக்கான ஆரம்ப செலவை மதிப்பிட்டுள்ளதாகவும், ஆனால் அந்த பணம் எதுவும் செலவிடப்படவில்லை எனவும் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடி காரணமாக சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் அரச விழாவைப் புறக்கணிக்குமாறு மக்களை கட்டாயப்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்ட போலிப் பிரச்சாரங்கள் குறுகிய அரசியல் செயல்முறையின் மற்றொரு தொடர்ச்சியையே எடுத்துக் காட்டுவதாகவும், பொய்யான தகவல்கள் மூலம் மக்களைத் தவறாக வழிநடத்தி, அரசாங்கத்தை மக்கள் வெறுக்கச் செய்வதும், அரசாங்கத்தை அசௌகரியப்படுத்துவதன் மூலம் அவர்களின் அரசியல் நலன்களை நிறைவேற்றுவதுமே இதன் நோக்கமாக இருக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.