அவுஸ்திரேலியா அணிக்கு அதிர்ச்சி கொடுத்த இந்தியா!
நாக்பூரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா அணியை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 132 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியுள்ளது.
இந்திய அணி சார்பில் அஸ்வின், ஜடேஜா ஆகியோரின் அபார பந்துவீச்சு அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.
இந்தியா–அவுஸ்திரேலியா இடையயான முதல் டெஸ்ட் துடுப்பாட்ட போட்டி போட்டி நாக்பூரில் இடம்பெற்றது . நாணய சுழட்சியில் வென்ற அவுஸ்திரேலியா முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அந்த அணி முதல் இன்னிங்ஸில் 177 ஓட்டங்களுக்கு அனைத்து ஆட்டமிழப்புகளையும் சந்தித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில் தலைவர் ரோஹித் சர்மாவை தவிர மற்ற வீரர்கள் சோபிக்கவில்லை.
ஒருகட்டத்தில் 240 ஓட்டங்களுக்கு 7 ஆட்டமிழப்புகளை இழந்திருந்த இந்திய அணி, பின்னர் கீழ் வரிசை வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால் நல்ல முன்னிலை பெற்றது.
சகலதுறை வீரர்களான ஜடேஜா – அக்சர் பட்டேல் நிதானமாக ஆடி ஓட்டங்களை சேர்த்தனர். ஜடேஜா 70 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அக்ஸர் பட்டேலும் சிறப்பாக ஆடி 84 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
இதன் மூலம் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 400 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. அதனைத் தொடர்ந்து 223 ஓட்டங்கள் பின் தங்கிய நிலையில் அவுஸ்திரேலியா தனது 2வது இன்னிங்சை தொடங்கியது.
இரண்டாவது ஓவரிலேயே அவுஸ்திரேலியாவுக்கு அஸ்வின் அதிர்ச்சி அளித்தார். அவரது பந்துவீச்சில் கவாஜா 5 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து லபுசாக்னே 17 ஓட்டங்களில் ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்த ஆன நிலையில், தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் பிரகாசிக்காத நிலையில் அவுஸ்திரேலியா அணி 90 ஓட்டங்களுக்கு சகல ஆட்டமிழப்புகளையும் சந்தித்தது.
இதன்மூலம் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. முதல் இன்னிங்ஸில் மூன்று, இரண்டாவது இன்னிங்ஸில் ஐந்து என அஸ்வின் மொத்தம் 8 ஆட்டமிழப்புகளை வீழ்த்தினார்.