சர்ச்சைக்குள் சிக்கிய ஜடேஜா – பந்தை சேதப்படுத்தினாரா!
அவுஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.
முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 177 ஓட்டங்களுக்கு சகல ஆட்டமிழப்புக்களையும் சந்தித்திருந்தது .
இதில் ரவீந்திர ஜடேஜா சிறப்பாக பந்துவீசி 5 ஆட்டமிழப்புகளை கைப்பற்றினார். இதனை தொடர்ந்து போட்டியின் 2ம் நாளான இன்று இந்திய அணி துடுப்பெடுத்தாடி வருகிறது.
இன்றைய ஆட்டநேர முடிவின் போது இந்திய அணி 321 ஓட்டங்களுக்கு 7 ஆட்டமிழப்புகளை சந்தித்துள்ளது. இந்திய அணி சார்பாக ரோஹித் சர்மா சதம் கடந்ததுடன் ஜடேஜா அக்சர் பட்டேல் ஆகியோர் அரைசதம் கடந்துள்ளனர்.
இந்த நிலையில், ஜடேஜா மீது அவுஸ்திரேலியா ஊடகங்கள் பந்தை சேதப்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக வெளியான ஒரு காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த காணொளியின் அடிப்படையில் , ”போட்டியின் போது ஜடேஜாவும், ரோகித் சர்மாவும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது பந்தை வைத்திருந்த ஜடேஜா, தனது விரலில் ஏதோ ஒன்றை பந்தின் மீது தேய்க்கிறார். முகமது சிராஜிடம் இருந்து அதனை ஜடேஜா வாங்கி தனதுவிரலில் தேய்கிறார் என சர்ச்சைக்குரிய கருத்துக்கள் எழுந்துள்ளன.
இதனை அவுஸ்திரேலியா ஊடகங்கள் , ஜடேஜா ஒருவகை கிரீமை கொண்டு பந்தை சேதப்படுத்தியதாக தெரிவித்துள்ளது.
குறித்த செயலை மையப்படுத்தி மைக்கேல் வாகன், ஸ்டீவ் வாக், டிம் பெயின் போன்ற முன்னாள் வீரர்களும் இதே கருத்தை முன்வைத்துள்ளனர்.
இந்த நிலையில், அவுஸ்திரேலியா ஊடகங்களின் கருத்தை இந்திய துடுப்பாட்ட நிர்வாகம் மறுத்துள்ளது.
இதுகுறித்து அணி நிர்வாகம் கூறுகையில், ஜடேஜா, தனது விரலில் வலி நிவாரணிக்காக பயன்படுத்தப்படும் மருந்தையே பயன்படுத்தினார் என்றும், அவர் பந்தை சேதப்படுத்தவில்லை என்றும் தெரிவித்தது.