உள்ளூராட்சி மன்ற தேர்தல் – நிராகரிக்கப்பட்ட தபால்மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள்!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக திறைசேரியிலிருந்து 100 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்குகளை குறியிடும் பணியை திட்டமிட்டபடி இம்மாதம் 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் மேற்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“உள்ளாட்சி தேர்தலுக்கு, பெப்ரவரி 10-ம் திகதி தபால் மூலமான வாக்களிப்புக்கான வாக்குசீட்டுகள் வழங்கப்பட்டன.
மேலும், 22, 23, 24 ஆகிய திகதிகளில் தபால் மூல வாக்களிப்புகள் இடம்பெறும். தபால் மூல வாக்காளர்கள் குறித்த தினத்தில் வாக்களிக்க முடியவில்லை என்றால், அவர் தனது தேர்தல் வாக்குச்சாவடியில் 28ஆம் திகதி தனது தபால் மூல வாக்கை பதிவு செய்யலாம்.
அதேபோன்று, பெப்ரவரி 19ஆம் திகதிக்குப் பின்னரும், உத்தியோகபூர்வ தேர்தல் வாக்குச்சீட்டுகளை வீடுகளுக்கு விநியோகம் செய்வதற்குத் தேவையான பணிகளை இலங்கை தபால் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது.” என தெரிவித்தார்.
இதன்போது ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர்,
கேள்வி – ”ஏறக்குறைய 36,000 தபால் வாக்குகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது?
பதில் – ஆம். மொத்தம் 36,000 தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
கேள்வி – தேர்தலுக்காக திறைசேரியில் இருந்து 100 மில்லியன் ரூபா பெறப்பட்டுள்ளதாக கேள்விப்பட்டீர்களா?
பதில் – ஆம். அந்தப் பணத்தை நாங்கள் பெற்றுள்ளோம்.”என தெரிவித்தார்.