உள்ளூர் உற்பத்தி பொருட்களின் ஏற்றுமதி தடைகளை நீக்க அதிரடி நடவடிக்கை
கள், கித்துல், பனை மற்றும் தென்னை தொடர்பான பொருட்களில் உள்ளூர் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் உள்ள தடைகளை நீக்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்றக் குழு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளது.
குறித்த அறிவுறுத்தலானது நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே (Mahindananda Aluthgamage) தலைமையில் தேசிய பொருளாதார மற்றும் பௌதீக திட்டங்கள் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் கூட்டத்தின் போதே வழங்கப்பட்டுள்ளது.
கலால் திணைக்களம் மற்றும் சுங்கத் திணைக்களம் உட்பட சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்கள், கள், கித்துல், பனை மற்றும் தென்னை தொடர்பான பொருட்களின் உள்ளூர் உற்பத்தி, விநியோகம் மற்றும் ஏற்றுமதி ஆகியவற்றில் உள்ள பிரச்சினைகளை விவாதித்து தீர்வு காண்பதற்காக குழுவின் முன் அழைக்கப்பட்டுள்ளன.
இதனடிப்படையில், வட மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும் பனையை உள்நாட்டிலும் மற்றும் வெளிநாடுகளிலும் மொத்தமாக விநியோகிப்பதற்கான தடைகளை நீக்குவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது.
கள், கித்துல், பனை மற்றும் தென்னை சார்ந்த பொருட்களை எளிதாகவும் முறையாகவும் ஏற்றுமதி செய்வதற்கு தேவையான அமைப்பை தயார் செய்யுமாறு ஏற்றுமதியாளர்களுக்கு குழு அறிவுறுத்தியுள்ளது.
அத்தோடு கள், கித்துல், பனை மற்றும் தென்னை தொடர்பான பொருட்களுக்கு வெளிநாடுகளில் பாரிய சந்தை காணப்படுவதாக குழு சுட்டிக்காட்டியுள்ளதுடன் அந்த தடைகளை நீக்குவதன் மூலம் எதிர்காலத்தில் அரசாங்கத்திற்கு கணிசமான வருமானத்தை ஈட்ட முடியுமெனவும் குழு தெரிவித்துள்ளது.
மேலும், கள், கித்துள், பனை மற்றும் தென்னை தொடர்பான பொருட்கள் தொடர்பான அனைத்து முன்மொழிவுகளையும் உள்ளடக்கிய முன்மொழிவை குழுவிடம் சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.