விமானத் துறைக்கு 22 பில்லியன் ரூபாய் லாபம்
சேவை வழங்கல் ஊடாக எமது நாட்டு விமானத்துறை 2023 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 22 பில்லியன் ரூபா இலாபம் ஈட்டியுள்ளதாக துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
அதில் சுமார் 10 பில்லியன் ரூபா திறைசேரிக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (09) நடைபெற்ற ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
பலாலி விமான நிலையத்தின் செயற்பாடுகள் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இதுவரை 200 விமானப் போக்குவரத்து சேவைகளைப் பூர்த்தி செய்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா,
கடந்த காலங்களில் பல்வேறு நெருக்கடிகள் காரணமாக விமான சேவைகள் பல சிரமங்களை எதிர்கொண்டிருந்தன. கோவிட் தொற்றுநோய் காரணமாக, விமானங்கள் நிறுத்தப்பட்டன. மேலும் சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைவாகவே காணப்பட்டது.
டொலர் நெருக்கடியால் முழு விமானப் போக்குவரத்துத் துறையும் பெரும் நெருக்கடியைச் சந்தித்தது. டொலர் நெருக்கடியால் விமானங்களுக்கு எரிபொருள் கிடைப்பது கூட கடினமாக இருந்தது. ஒரு விமானத்தை சென்னைக்கு அனுப்பி மற்றொரு விமானத்திற்கு எரிபொருளைக் கொண்டு வரும் நிலை காணப்பட்டது.
ஆனால், பெற்றோலியத் துறை அமைச்சரும், நானும் தலையிட்டு, விமானங்களுக்கான எரிபொருள் இறக்குமதியை தனியாரிடம் கொடுத்ததன் மூலம், தட்டுப்பாடின்றி விமானங்களுக்கு எரிபொருள் கிடைக்கும் சூழல் உருவானது.
மேலும், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை நவீன தொழில்நுட்பத்துடன் அபிவிருத்தி செய்ததன் காரணமாக, தென்கிழக்கு ஆசியாவின் சிறந்த விமான நிலையங்களில் ஒன்றாக சர்வதேச விமானப் போக்குவரத்து அதிகாரசபை பெயரிட்டுள்ளது.
அதேநேரம், இலங்கைக்கு வரும் பல்வேறு விமான நிறுவனங்களுக்கு சொந்தமான விமானங்களின் விமானப் போக்குவரத்து சேவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளன.
எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் வாரத்திற்கு 28 விமான சேவைகளையும், சீனா ஈஸ்டன் ஏர் வாரத்திற்கு 05 விமான சேவைகளையும், எதிஹாடர் 06 விமான சேவைகளையும், கத்தார் ஏயார் 35 விமான சேவைகளையும், ஏர் அரேபியா 11 விமான சேவைகளையும், ஏர் இந்தியா 17 விமான சேவைகளையும், ஜசீரா ஏர் 04 விமான சேவைகளையும் முன்னெடுத்து வருகின்றன.
மேலும் பல விமான நிறுவனங்கள் இலங்கை ஊடாக தமது சேவைகளை ஆரம்பிக்க இணங்கியுள்ளன.
மேலும், பலாலி விமான நிலையத்தின் செயற்பாடுகள் மிகவும் வெற்றிகரமாக தொடர்கின்றன. சென்னை மற்றும் பலாலி இடையே வாரத்திற்கு மூன்று சேவைகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டதோடு இதுவரை 200 விமான சேவைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.
கொரோனா மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக பயணிகள் அற்ற வலயமாக இருந்த கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையம் தற்போது பரபரப்பான விமான நிலையமாக மாறி வருகிறது. பண்டாரநாயக்க விமான நிலையம் கடந்த ஆகஸ்ட் மாதம் 650,000க்கும் அதிகமான பயணிகளுக்கு சேவைகளை வழங்கியுள்ளது. விமான சேவைகளை வழங்குவதன் மூலம் இந்த வருடத்தின் முதல் எட்டு மாதங்களில் 22 பில்லியன் ரூபா இலாபத்தை ஈட்ட முடிந்துள்ளது. அதில் பத்து பில்லியன் ரூபாவை திறைசேரிக்கு வழங்கியுள்ளோம்.
மத்தள விமான நிலையத்திற்கு முதலீட்டாளர்களை ஈர்க்கும் வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படுகிறது. அதன் செயல்பாட்டு இழப்புகளை குறைக்க ஏற்கனவே ஒரு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஸ்ரீலங்கன் விமான சேவையை மறுசீரமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அந்த திட்டத்தை திறைசேரிக்கு அனுப்பிய பின்னர், உலக வங்கியுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
இதன்படி, ஸ்ரீலங்கன் விமான சேவையை மறுசீரமைப்பதற்கான வெளிப்படைத்தன்மையை உருவாக்க சர்வதேச ஆலோசகர் ஒருவரின் உதவியை நாட பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி, புதிய ஆலோசகர் நியமிக்கப்பட்டு, ஸ்ரீலங்கன் விமான சேவையை விரைவாக மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திட்டமிட்டபடி பணிகள் நடந்தால், அடுத்த ஆண்டு பெப்ரவரிக்குள் எதிர்பார்க்கும் பலன்களைப் பெறலாம்.
தற்போது எங்களிடம் எந்த விமானமும் இல்லை. அனைத்து விமானங்களும் குத்தகைக்கு எடுக்கப்பட்டவையாகும். ஏ330 விமானங்கள் இல்லாததால் இங்கிலாந்து, பிரான்ஸ், ஆவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு விமான சேவைகளை நடத்த முடியவில்லை. தற்போது குத்தகைக்கு எடுத்துள்ள அனைத்து விமானங்களும் ஏ320 விமானங்களாகும். அந்த விமானங்களைக் கொண்டு தூர இடங்களுக்கு சேவை மேற்கொள்ள முடியாது. எனவே, விமான நிறுவனத்தை மறுசீரமைப்பதன் மூலம் இதுபோன்ற பல சிக்கல்களைத் தீர்க்க முடியும்.
அண்மையில் விமானம் தாமதம் காரணமாக ஏற்பட்ட இழப்பு 06 பில்லியன் டொலர்கள். விமானங்களின் தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே தாமதம் ஏற்பட்டதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. ஆனால் ஒரு விமானியால் விமானப் பொறியாளரின் சான்றிதழ் இல்லாமல் விமானத்தை செலுத்த முடியாது. குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை விடுத்து வெற்றிகரமாக முன்னோக்கிச் செல்வதற்கான ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் ஒரு விமானிக்கு 4 மில்லியன் ரூபாய் (40 லட்சம்) மாத சம்பளம் வழங்கப்படுகிறது. உலகில் உள்ள முன்னேற்றகரமான விமான நிறுவனங்கள் வழங்கும் சம்பளத்தை விட அதிக சம்பளம் கேட்கிறார்கள். ஆனால் தற்போதைய நிலைமையில் அது சாத்தியமில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.