தேர்தல் வாக்குச்சீட்டுகளை அச்சிடுவது தொடர்பில் வெளியான தகவல்!
உள்ளூராட்சித் தேர்தல் வாக்குச்சீட்டுகளை அச்சிடக் குறைந்தது ஒரு மாத காலம் தேவைப்படுவதாக அரசாங்க அச்சகம் தெரிவித்துள்ளது.
தற்போதைக்கு உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குச்சீட்டுகள்அச்சிடும் பணி 75 வீதம் நிறைவடைந்துள்ளது.
அதற்கான செலவினமாக 150 மில்லியன் ரூபா கணக்கிடப்பட்டுள்ள போதிலும் தேர்தல் ஆணைக்குழுவினால் 40 மில்லியன் ரூபா மட்டுமே அரசாங்க அச்சகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக அச்சிடப்பட்ட தபால் மூல வாக்குச் சீட்டுகளையும் மீண்டும் சரி பார்க்க வேண்டியிருப்பதாகவும் அதற்காக ஒரு வாரமளவில் அவகாசம் தேவைப்படுவதாகவும் அரசாங்க அச்சகத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அத்துடன், குறைந்த பட்சம் இன்னும் 20 மில்லியன் ரூபா அளவில் வழங்கப்பட்டால் மாத்திரமே எஞ்சியுள்ள அச்சிடும் பணிகளை நிறைவு செய்ய முடியும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதே போன்று எதிர்வரும் நாட்களில் அச்சக பணியாளர்கள் விடுமுறை பெற்றுக் கொள்ளாமல் தொடர்ச்சியாக பணியாற்றினாலும் கூட அச்சிடும் பணிகளை முழுமையாக மேற்கொள்வதற்குக் குறைந்தது ஒரு மாத காலம் அவகாசம் தேவை என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.