உள்நாட்டு கடன் பொறியிலும் சிக்கியுள்ள இலங்கை; அடுத்த மாதம் அரசுக்கு ஏற்படவுள்ள பாரிய சுமை!
ஜனவரி முதல் பெப்ரவரி 15 வரையான காலப்பகுதியில், திறைசேரி உண்டியல்கள் மற்றும் திறைசேரி பத்திரங்கள் மூலம் அரசாங்கம் 1,033 பில்லியன் ரூபாவை கடனாகப் பெற்றுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.
உள்நாட்டில் பெற்ற கடன்களை செலுத்துவதற்கு கடன்களை பெற்றுக் கொள்வதன் மூலம் எதிர்காலத்தில் பிரச்சினைக்குரிய சூழ்நிலை உருவாகும் என சுட்டிக்காட்டிய அவர் வெளிநாட்டு கடனை செலுத்த தவறிய அரசாங்கம் உள்நாட்டு கடன் பொறியிலும் சிக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்ட்டுள்ளார்.
இதேவேளை மார்ச் மாதத்திற்கான அரசாங்கத்தின் எதிர்பார்க்கப்படும் வருமானம் 173 பில்லியன் ரூபா எனவும் அரச உத்தியோகத்தர் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் ஏனைய மானியங்களுக்காக அரசாங்கம் எதிர்பார்க்கும் செலவு 196 பில்லியன் ரூபா எனவும் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன நேற்று (21) தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாளாந்த செலவுகளுக்காக அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய அத்தியாவசிய செலவுகளுக்காக மேலும் 23 பில்லியன் ரூபா தேவைப்படுவதாக சுட்டிக்காட்டிய நிதியமைச்சின் செயலாளர், மேலும் மார்ச் மாதத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன் சேவைக்காக 508 பில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.