நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட மின்சார சட்டமூலம்!

எதிர்ப்புக்களுக்கு மத்தியில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட மின்சார சட்டமூலம்! | Submission Of Electricity Board Bill To Parliament

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால் (Kanchana Wijesekera) சற்று முன்னர் நாடாளுமன்றத்தில் உத்தேச மின்சார சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் இன்று (25)  இடம்பெற்ற அமர்வின் போது அவர் சமர்ப்பித்துள்ளார்.

அத்தோடு இந்த முன்மொழிவு விரைவில் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சாரத் தொழிலுக்காக சீர்த்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்காக ஏற்பாடு செய்வதற்கும், தேசிய மின்சார மதியுரைப் பேரவையைத் ஸ்தாபிப்பதற்காக ஏற்பாடு செய்வதற்கும், இச்சட்டத்தின் நியதிகளின் படி 2002 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட இலங்கைப் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சாரத் தொழிலுக்கான ஒழுங்குப்படுத்துநராக இருப்பதற்கு ஏற்பாடு செய்வதற்குமான தீர்மானங்கள் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 2007 ஆம் ஆண்டின் ஏழாம் இலக்க நிறுவனங்கள் சட்டத்தின் கீழான எந்தக் கூட்டிணைக்கப்பட்ட உருவகங்களிலும் மின்பிறப்பாக்கம், மின்கடத்துகை, மின்விநியோகிப்பு, மின்வியாபாரம், மின்வழங்குகை மற்றும் மின்பெறுகை சம்பந்தமான அனைத்து செயற்பாடுகளும் உரித்தாக்கப்பட வேண்டுமென கூறப்பட்டுள்ளது.

அத்தோடு, அந்தக் கூட்டிணைக்கப்பட்ட உருவகங்களின் கூட்டிணைப்புக்கு ஏற்புடையதாக சட்டவாக்க வழிமுறைகளை ஏற்பாடு செய்வதற்கும், தொடர்புப்பட்ட செயற்பாடுகளுக்கும் ஏற்புடையதாக இருக்க வேண்டிய செயன்முறைகளைக் குறித்து உரைப்பதற்கும் 1969 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சபைச் சட்டத்தையும் மற்றும் 2009 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க இலங்கை மின்சார சட்டத்தையும் நீக்குவதற்கும் அத்துடன் அவற்றோடு தொடர்புப்பட்ட அல்லது அவற்றின் இடைநேர் விளைவான எல்லாக் கருமங்களுக்கும் ஏற்பாடு செய்வது சட்டமூலத்தின் நோக்கமாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button