புதிய அமைச்சரவையை நியமிக்க ரணில் திட்டம்: மொட்டுக் கட்சியில் பலருக்கு வாய்ப்பு
சர்வதேச நாணய நிதியக் கடன் தொகையின் முதல் தவணைக் கொடுப்பனவு கிடைத்துள்ள நிலையில், புதிய அமைச்சரவையை நியமிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திட்டமிட்டுள்ளார் என்று அரச வட்டாரம் தெரிவிக்கின்றது.
இதில் பல மாதங்களாக இழுபறியில் இருந்து வரும் 10 புதிய அமைச்சர்களின் நியமனமும் அடங்கும் எனத் தெரியவருகின்றது.
அமைச்சரவையில் தமது தரப்பைச் சேர்ந்த மேலும் 10 பேரைச் சேர்க்க வேண்டும் என்பது மொட்டுக் கட்சியின் கோரிக்கையாகும்.
புதிய அமைச்சரவை மாற்றம் என்பது பல மாதங்களாகப் பேசப்பட்டு வருகின்றது. நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையில் புதிய அமைச்சரவையை நியமித்தால் மக்கள் அதிருப்தியடைவார்கள் என்பதால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதை இழுத்தடித்தே வந்திருந்தார். பொருத்தமான தருணம் வரும் போதே அந்த நியமனத்தைச் செய்வதென்பது ஜனாதிபதியின் திட்டம்.
ஆனால், மொட்டுத் தரப்பு அமைச்சரவையில் தமது அணியைச் சேர்ந்த மேலும் 10 பேரை நியமிக்குமாறு தொடர்ச்சியாக ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்து வந்தது. இதோ நியமிக்கின்றேன், அதோ நியமிக்கின்றேன் என்று கூறி ஜனாதிபதி இழுத்தடித்தார்.
இறுதியாக 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் முடிவடைந்ததும் புதிய அமைச்சரவையை நியமிக்கின்றேன் என்று கூறி மொட்டுக் கட்சியினரை ஜனாதிபதி ஆறுதல்படுத்தினார்.
இறுதியில் அதுவும் நடக்கவில்லை. இதனால் மொட்டு எம்.பிக்கள் ஜனாதிபதி மீது கடும் அதிருப்தியில் இருந்தனர். ஆனால், சர்வதேச நாணய நிதியத்தின் கடன் கிடைத்த பின் புதிய அமைச்சரவை நியமிப்பதுதான் பொருத்தமானது என்று ஜனாதிபதி கருதினார்.
அதன் அடிப்படையில் சர்வதேச நாணய நிதியக் கடன் தொகையின் முதல் தவணை கொடுப்பனவு தற்போது கிடைத்துள்ள நிலையில், புதிய அமைச்சரவையை நியமனத்துக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தேசித்துள்ளார் என அரசியல் வட்டாரம் தகவல் வெளியிட்டுள்ளார்.