இலங்கையின் மூன்றாவது தேசிய வைத்தியசாலை – அமைச்சரவை அங்கீகாரம்
நாட்டின் மூன்றாவது தேசிய வைத்தியசாலையாக கராபிட்டிய போதனா வைத்தியசாலையை (Karapitiya Teaching Hospital) மாற்றுவதற்கு சிறிலங்கா அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் (Government Information Department) தற்போது இடம்பெற்று வரும் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் வைத்து அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardane) இதனை தெரிவித்தார்.
தற்போது இலங்கையில் அபிவிருத்தியடைந்த தேசிய வைத்தியசாலைகளாக கொழும்பு (Colombo) மற்றும் கண்டி (Kandy) தேசிய வைத்தியசாலைகள் மட்டுமே உள்ளன.
இதன்படி காலி – கராபிட்டிய போதனா வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தற்போது வைத்தியர்கள், தாதியர்கள் போன்றவர்களுக்கு பயிற்சி அளிப்பதில் கராபிட்டிய வைத்தியசாலை சுகாதார துறைக்கு அதிகளவு பங்களிப்புச் செய்வதாக அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை ருஹுனு பல்கலைக்கழகத்திற்கு மருத்துவ பயிற்சியை வழங்கும் வைத்தியசாலையாக வருடாந்தம் 1000 இற்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் பயிற்சி பெறுவதாகவும் குறிப்பிட்டார்.
அத்துடன் பொத்துவில் ஆதார வைத்தியசாலையை மத்திய அரசாங்கத்தினால் அபிவிருத்தி செய்வதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.