இலங்கையின் கல்வி முறையில் ஏற்படவுள்ள மாற்றம்!

நாட்டிலுள்ள மத்திய கல்லூரிகள் மற்றும் தேசிய பாடசாலைகள் செயற்கை நுண்ணறிவு பாடசாலைகளாக மேம்படுத்தப்பட வேண்டும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.

காலி (Galle) – ஹால் டி கோல் ஹோட்டலில் நேற்று (06) நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அதிபர் இதனைக் குறிப்பிட்டார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அதிபர் ரணில் விக்ரமசிங்க, “தற்போது உலகம் நவீன தொழில்நுட்பத்துடன் முன்னேறி வருகிறது. அதற்கேற்ப, இந்நாட்டின் கல்வி முறையும் நவீன தொழில்நுட்பத்துடன் நடத்தப்பட வேண்டும். அதற்குத் தேவையான கல்விச் சீர்திருத்தங்கள் அமைச்சினால் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

அன்று நாம் பல கல்விக் கொள்கைகளை நாட்டுக்கு அறிமுகப்படுத்தினோம். அந்தக் கல்விக் கொள்கைகள் அன்றைய காலத்திற்கு ஏற்றதாக இருந்தாலும், இன்று ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியால், கல்வித் துறையில் புதிய சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன.

தற்போது பாடசாலைகளில், செயற்கை நுண்ணறிவுக் கழகங்களை உருவாக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். அமெரிக்கா (America), இங்கிலாந்து (England) போன்ற நாடுகள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பக் கல்வியை தொடங்கி சில வருடங்கள் ஆகிறது.

இந்த ஆண்டு நாம் ஆரம்பித்திருக்கும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல ஆசிரியர்களுக்கு சிறந்த பயிற்சி தேவைப்படும். அதற்குத் தேவையான பயிற்சி மற்றும் உட்கட்டமைப்பு வசதிளை அரசாங்கம் ஏற்படுத்தும்.

மத்திய கல்லூரிகள் மற்றும் தேசிய பாடசாலைகள் செயற்கை நுண்ணறிவு பாடசாலைகளாக மேம்படுத்தப்பட வேண்டும். நவீன தொழில்நுட்பத்துடன் முன்னேறுவதில் அண்டை நாடான இந்தியாவிடம் (India) இருந்து கிடைக்கும் ஆதரவு மிகவும் பாராட்டத்தக்கது.

பிரதமர் நரேந்திர மோடியும் (Narendra Modi) இலங்கைக்கு ஐ.ஐ.டி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை வழங்க விருப்பம் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவுடன் எரிசக்தித் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளும் வெற்றிகரமாக நடந்து வருகின்றன.

மலேசியாவில் (Malaysia) நான் எலோன் மஸ்குடன் (Elon Musk) கலந்துரையாடினேன். அவரது நிறுவனத்தின் இணையத் தொழில்நுட்பம் நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் இலங்கையில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கிறோம். இதன் மூலம் தொலைதூர கிராமங்களில் உள்ள பிள்ளைகளுக்கு தொழில்நுட்பக் கல்வி வழங்கும் வாய்ப்பு கிடைக்கும்.

இன்று தென் மாகாணம் கல்வித்துறையில் அதீத திறமைகளை வெளிப்படுத்தும் மாகாணமாக மாறியுள்ளது. தென் மாகாணத்தின் முதலாவது டச்சு பாடசாலையான பத்தேகம கல்லூரி இன்று தேசிய பாடசாலையாக மாறியுள்ளது.

நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்காலத்திற்கு ஏற்ற சந்ததியை உருவாக்கி ஒரு நாடாக உலகையே வெல்லும் வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளது” என்று தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button