அரச நிறுவனங்களில் நிறுவப்படவுள்ள புதிய பிரிவு : வெளியான அறிவிப்பு
நாட்டிலுள்ள அனைத்து அரச நிறுவனங்களிலும் பயனுள்ள பொது சேவைகளை வழங்குவதற்காக உள் விவகாரப் பிரிவை நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான சுற்றறிக்கையை ஜனாதிபதியின் செயலாளர் என்.எஸ்.குமாநாயக்க (N.S. Kumanayake) வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஊழலைத் தடுப்பதும், அரச நிறுவனத்திற்குள் ஒருமைப்பாட்டின் கலாசாரத்தை வளர்ப்பதும், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதும், நெறிமுறை நிர்வாகத்தை ஊக்குவிப்பதும், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவுடன் இணைந்து சட்ட நடைமுறைப்படுத்தலில் உதவும் நோக்கத்திற்காக இந்த பிரிவு நிறுவப்படவுள்ளது.
அனைத்து அரச நிறுவனங்களிலும் உள்ளக விவகாரப் பிரிவு ஒரு சிறப்புப் பிரிவாக நிறுவப்பட வேண்டும் என்றும், அதன் ஆரம்ப கட்டமாக, அனைத்து அமைச்சரவை அமைச்சுகள், மாகாண தலைமைச் செயலகங்கள் மற்றும் மாவட்டச் செயலகங்களிலும் இது நிறுவப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இந்த உள் விவகாரப் பிரிவுகளை நிறுவுவது தொடர்பாக ஜனாதிபதியின் செயலாளர், அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண தலைமைச் செயலாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுக்கு எழுத்துப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டுள்ளதாகக் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.